இசுரு சாமர சோமவீர (சிங்கள மூலம்), எம்.ரிஷான் ஷெரீப் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: ஆதிரை வெளியீடு, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2021. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை).
150 பக்கம், விலை: இந்திய ரூபா 140., அளவு: 21.5×14 சமீ.
அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் வழியே, எவரும் கண்டிராத அவர்களின் இரகசியப் பக்கங்களை வெளிப்படையாகத் திறந்து விட்டிருக்கிறார் இஸுரு. கட்டுக்கோப்பானதும், மீறினால் சட்டத்தால் தண்டிக்கப்படக் கூடியதுமான இறுக்கமான கலாசாரப் பின்னணி கொண்ட இலங்கை சமூகத்தினுள்ளே விரவிக் கிடக்கும் மறைவான பக்கங்களை குறிப்பாக, பாலியல் தொடர்பான விடயங்கள், விகாரை மடங்களில் பால்ய வயது பிக்குகள் எதிர்கொள்ளும் சங்கடங்கள், பெண்களின் உள்ளக் குமுறல்கள், மதத்தின் போர்வைக்குள் இருக்கும் அரசியல் போன்ற, எவரும் வெளிப்படையாகப் பேசக் கூட அஞ்சும் விடயங்களை தைரியமாக தனது சிறுகதைகள் மூலமாக வெளியே கொண்டு வந்திருக்கிறார் இஸ{ரு எனும் இந்த இலக்கியப் போராளி. இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுகதைகளால் பின்னப்பட்ட ஒரு நாவலைப் போல வாசகர் உணரக் கூடும். காரணம், ஒரு சிறுகதையில் சிறு கதாபாத்திரமாக வந்து போகும் நபர், அடுத்தடுத்த சிறுகதைகளில் பிரதான கதாபாத்திரமாக தனது கதையைச் சொல்லியிருப்பார். இந்தக் கதாபாத்திரங்களோடு கைகோர்த்துக் கொண்டு நீங்களும் இறப்பர் தோட்டங்களில், நீரணங்குத் தீரங்களில், நகரத்துத் துணிக்கடைகளில், சேனைப் பயிர் நிலங்களில், ரயில் நிலையங்களில், பிணங்கள் மிதந்து செல்லும் ஆற்றின் கரைகளில், போர் தின்ற நிலங்களில், விகாரை பூமியில் என ஒன்றுக்கொன்று வித்தியாசமான தளங்களில் ஒரு சஞ்சாரியாகத் திரியலாம். இதிலுள்ள பத்துக் கதைகளும், கிராஞ்சி, திருமதி பெரேரா, எனது மீன், நீரணங்குத் தீரம், அன்பின் நிமாலிக்கு, இறப்பர், நீலப்பூச்சட்டை, பெண்கள்-ஆண்கள்-பூக்கள்-பழங்கள், சாந்த, அது ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.