சயந்தன். யாழ்ப்பாணம்: ஆதிரை வெளியீடு, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2021. (சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர்).
256 பக்கம், விலை: இந்திய ரூபா 190., அளவு: 20.5×12.5 சமீ.
அகதியாக சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்த அருள்குமரன், அற்புதம், அபர்ணா எனச் சிலரைச் சுற்றி நடக்கும் கதை. அருள்குமரன், அற்புதம் இருவரும் அகதி வாழ்வில் சந்திக்கும் மனிதர்களும் அவர்களுடைய கடந்த கால வாழ்வுமாக நாவல் முன்னும் பின்னுமாக முடையப்பட்டுள்ளது. அஷேரா ஒரு வாழ்வை விரித்துப் பரப்பிய கதைப்பிரதியல்ல. அது தெரிந்தெடுத்த மனிதர்களுடைய ஒன்றோடொன்று ஊடும் பாவியும், விலகி வெளியேறுவதுமான கதைகளின் தொகுப்பு. முன்னும் பின்னுமான காலமும் இங்கும் அங்குமான நிலங்களின் அலைவும் பிரதி முழுவதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாவலில் அனைத்துச் சம்பவங்களும் ஏற்கெனவே நிகழ்ந்து முடிந்துவிட்டன. நாவலுக்குள் நிகழ்வது நினைவுமீட்டல்கள் மட்டுமே. இந்தக் கட்டமைப்பு நாவலுக்கு ஒரு நோக்கத்தைக் கொடுக்கிறது. சயந்தனின் முந்தைய நாவல்களுடன் ‘அஷேரா”வைப் பொருத்தி வாசிக்கச் செய்கிறது. சயந்தனின் நாவல்கள், சிறுகதைகள் எவற்றிலுமே தீர்மானமான அரசியல் நிலைப்பாடுகள் வெளிப்படுவது இல்லை. தொடர்ச்சியான அழுத்தமான தனித்தனிக் கதைகள் வழியாக உருவாகும் ஒரு முழுச் சித்திரத்தைக் கொண்டே நாவலின் தரிசனம் நோக்கிப் போக முடிகிறது. போரால் பாதிக்கப்படாத ஒரு மனிதனையாவது சந்திக்க விழையும் அருள்குமரனின் விழைவு நாவலின் முக்கியமானதொரு இழை. போரால் தன்னுடைய நீண்ட வாழ்விலிருந்து எந்த அர்த்தத்தையும் திரட்டிக்கொள்ள இயலாத, வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் பிறரின் கருணையை எதிர்பார்த்தே நிற்க வேண்டிய நிலையில் இருக்கும் அற்புதத்தின் வாழ்க்கைச் சூழல் மற்றொரு இழை. இதற்கிடையில் இன்னும் பலரும் தங்களுடைய நினைவுகளை மீட்டிச் செல்கின்றனர். ஆப்கானிஸ்தான், சுவிட்சர்லாந்து என ஈழம் கடந்த போர் பற்றிய சித்திரிப்புகளும் நாவலுக்குள்ளேயே இடம்பெறுகின்றன. அவ்வகையில், கடந்துபோன ஒரு போரை விசாரணை செய்யும் ஒரு பிரதியாக ‘அஷேரா’ வை வாசிக்க முடிகிறது. அற்புதம், முதல் தலைமுறை ஈழப் போராளி. ப்ளோட், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களைப் பகைத்துக்கொண்டவர். ஒவ்வொரு தருணமாகத் தப்பித் தப்பி சுவிட்சர்லாந்துக்கு வந்துசேர்கிறார். அங்கு பல வருடங்கள் கழித்து தன்னுடைய அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அருள்குமரனைச் சந்திக்கிறார். தொடக்கத்தில் அது ஒரு நல்ல நட்பாக அமைந்தாலும் ஒரு தருணத்தில் அருள்குமரன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவன் என்று அறிந்த பிறகு, அவனே தன்னைக் கொலை செய்ய அனுப்பப்பட்டவன் என்று எண்ணிவிடுகிறார். தன்னைக் கொன்றுவிட வேண்டாம் என்று அவனிடம் கெஞ்சுகிறார். அருள்குமரனும் இயக்கத்திலிருந்து விலகியே சுவிட்சர்லாந்துக்கு வருகிறான். ஆனால், அவனையும் அவன் செய்தே இருக்காத ஒரு தவறின் நினைவு துரத்துகிறது. அருள்குமரனிடம் அற்புதமும் அபர்ணாவிடம் அருள்குமரனும் அடைக்கலமாக முயல்கின்றனர். இறுதிப் போர் முடிந்த பிறகு அல்லது போர்ச் சூழலிலிருந்து அதில் ஈடுபட்டவர்கள் தப்பிய பிறகும்கூட நினைவுகளில் போர்ச் சூழல் உருவாக்கிய பதற்றமும் நிச்சயமின்மையும் தொடரவே செய்கிறது.