முஸ்டீன். கொழும்பு: செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்தப் பதிப்பகம் (SIM), காவத்தமுல்லை, 1வது பதிப்பு, ஜுன் 2017. (கொழும்பு 4: மிஸ்டர் பிரின்ட் கெயார்).
124 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 19×15 சமீ., ISBN: 978-955-1447-03-8.
முஸ்டீனின் புலக்காட்சி தனித்துவமானது. அதனால் அவரது படைப்பு மலர்ச்சியும் தனித்துவமானது. பட்டறிவிலே தோய்ந்தெழும் இந்த எழுத்தாக்கம் நடப்பியலின் செவ்விய வழியிலே நகர்ந்து செல்கின்றது. நடப்பியலைப் புனைவுக்குக் கொண்டுவரும் பொழுது நிகழக்கூடிய சமநிலைப் பிறழ்வைத் தவிர்த்து ஆக்கச்செயன்முறையைக் கலை முகிழ்ப்பினுக்கு உள்ளாக்கிய நூலாசியரின் திறன் பாராட்டுதற்குரியது. கணினிவழியான தொடர்பாடல் மிகுந்துள்ள சமகாலத்தில் அதன் இயக்கங்களைப் புனைவுடன் தொடர்பு படுத்தும் முயற்சியையும் நூலாசியர் முன்னெடுத்துள்ளார். கதையின் எடுத்தியம்பல் முறையிலே தனக்குரிய தனித்துவத்தைப் பதித்திருப்பதோடு மட்டுமன்றி அதனை மேலும் வலுப்படுத்தும் முயற்சியையும் இந்நூலில் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தாம் அனுபவித்த வாழ்க்கை நெருடல்களை தெறிப்புக்குள்ளாக்கி, எழுதும் செயற்பாட்டில் தெளிவும் திடமும் மேலோங்கியுள்ள கலை நேர்மை கவனிப்பிற்குரியது. குறுநாவலை வாசிக்கும் பொழுது வித்தியாசமான அனுபவங்களுாடே நகர்ந்து செல்லும் உற்சாகம் சூழ்ந்து கொள்கிறது. நூலாசிரியரின் சமூக நேர்மையும் மார்க்கக் கல்வியில் உள்ள ஈடுபாடும் தொடர் கோலங்களாக வந்து கொண்டிருக்கின்றன. உறுத்தும் உள்ளப் பதிவுகளை இலக்கிய வெளிக்குள் கொண்டுவருவதிலே சிரமமற்ற சிக்கனப் பாடு காணப்படுகின்றது. விபரணங்களுாடே இடம்பெற்றிருக்கும் உரையாடல் வழியாக முன்வைக்கப்படும் கருத்தியலின் உறுதி சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒரு சிறப்புப் பண்பாகவுள்ளது. உரையாடல் நிலையிலிருந்து கருத்து வினைப்பாட்டு (Discourse) நிலைக்கு எழுத்தாக்கம் நகர்ந்து செல்வதைக் காணமுடிகின்றது. அதனூடே நூலாசியருக்குரிய இலட்சியத் தெளிவு நிலை கொள்கிறது. சம்பவங்களின் குரூரமான நிலைகளினூடே நிதானித்து, தமது கருத்தாடல்களை முன்னெடுக்கும் வேளை கலைத்துவத்திற்குரிய வனப்புடன் நூலாசியரின் எழுத்தாக்கம் நீட்சி கொள்கிறது. அன்பர் முஸ்டீனுக்குரிய தனித்துவம் பின்ணினைப்பு என்ற பகுதியை ஆக்கங்களுடன் இணைத்து விடுதலாகும். மிகவும் பிரச்சினைக்குரிய விடயங்கள் அவரால் எடுத்தாளப்படுகின்றன. ஆயினும் எனது அணிந்துரை அந்த இணைப்போடு தொடர்புபட்டிருக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சுவையுள்ள ஒரு குறுநாவலைப் படிக்கும் மகிழ்ச்சியுடன் அன்பர் முஸ்டீனுக்கு எனது வாழ்த்துக்கள். (அணிந்துரையில், போராசியர் சபா.ஜெயராசா).