ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: இளவரசி உதயசூரியன் பதிப்பகம், வள்ளுவன் மேடு, மாவேற்குடாப் பிரிவு-01, திருப்பழுகாமம், பெரியபோரதீவு, 1வது பதிப்பு, கார்த்திகை 2019. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன் அச்சகம், பிரதான வீதி).
206 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7300-08-5.
ஆ.மு.சி.வேலழகனின் 34ஆவது நூலாக இந்நாவல் வெளிவந்துள்ளது. பன்னிரண்டு அத்தியாயங்கள் கொண்டது. செங்கமலம், காளிக்குட்டி, சின்னமுத்து, அன்னம்மா, வஜியராஜ், பொன்னுச்சாமி, அவரது மணைவி, அவர் மகள் எனப் பல பாத்திரங்கள் இந்நாவலில் உலா வருகின்றனர். கிராமத்து மக்களின் காதல் உணர்வுகளையும், ஒழுக்கப் பண்புகளையும், உள் உந்தல்களையும் சிறப்பற வெளிக்காட்டும் கிராமிய மண் கமழும் சமூக நாவல். ஏழ்மையில் வாழநேர்ந்தாலும், ஒரு கிழக்கிலங்கைக் கிராமத்து மக்களின் சிறப்பினையும், வரலாற்றுப் பண்புகளையும், உயர்ந்து நிற்கும் உறவுகளையும், கிராமத்து மக்களின் வாழ்வியலையும் படம்பிடித்துக் காட்டுகின்றது. அன்பையும், காதலின் ஆளுமையையும், அதன் புனிதத்தையும் சொல்லும் இந்நாவல், கிராமத்து உணர்வுகளை, கிராம மக்களின் பண்புகளையும், வாழ்வாதாரங்களையும் குறையில்லாது கூறி வெற்றிபெறுகிறது. கிழக்கிலங்கையிலுள்ள கோயில்கள், அவற்றின் வரலாறு போன்றவற்றையும் இடையிடையே தொட்டுச் செல்கின்றது. ‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்ற திருக்குறளின் வரிகள் நாவலின் தலைப்பாகின்றது. ‘உருவத்தைப் பார்த்து ஒருவரை கேலி செய்யக் கூடாது. உருண்டு வரும் பெரிய தேருக்கு அச்சாணி போல உள்ளவர்களை உடையது உலகு” என்பதே இதன் பொருளாகும்.