அகரமுதல்வன். சென்னை 600 089: நூல்வனம், Plot No. 14, Door No. 5/3. 5/3, ஸ்ரீராம் நகர் இரண்டாவது தெரு, ராமாபுரம், 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2020, 1வது பதிப்பு, பெப்ரவரி 2019. (சென்னை: ரமணி பிரின்ட் சொலுஷன்ஸ்).
192 பக்கம், விலை: இந்திய ரூபா 220.00, அளவு: 22.5×14.5 சமீ.
நாவலின் தொடக்கத்தில் மனோ. மோகனின் வரிகள் ‘நம்ப முடியாத போதும்கூட அது அப்படித்தான் நடந்தது’ என்று தொடங்கும் கவிதை இடம்பெற்றுள்ளது. அதுபோலவே இந்தக் குறுநாவல்களில் சொல்லப்படும் விடயங்களும் நம்ப முடியாத போதும்கூட அது அப்படித்தான் நடந்திருக்கும் என்று தோன்றுகிறது. நாவலில் அகரமுதல்வனின் எழுத்துக்கள் பல இடங்களில் நம்மை உறைய வைக்கிறது. எண்ணமுடியாத துயரை ஈழத்தில் அவர்கள் அனுபவித்துள்ளனர். அந்த வலியை அவர் தன் எழுத்தினூடே நமக்கு கடத்துகிறார். ‘நான் எழுதுவதற்கு இந்த நூற்றாண்டு மட்டும் போதாது. அவ்வளவு திரளான பாவத்தை இவ்வுலகம் எனக்குச் செய்திருக்கிறதென்பதை நீங்கள் அறிவீர்கள் தானே’ என்னும் அகரமுதல்வனின் வரிகள் வலிமிகுந்தவை. அகரமுதல்வன் (1992) கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பளை என்ற ஊரில் பிறந்தவர். இதுவரை இவரது நான்கு கவிதைத் தொகுதிகள்- தொடரும் நினைவுகள், அத்தருணத்தில் பகை வீழ்த்தி, அறம் வெல்லும் அஞ்சற்க, டாங்கிகளில் சரியும் முல்லை நிலா ஆகிய தலைப்புகளிலும், மூன்று சிறுகதைத் தொகுப்புகள்-இரண்டாம் லெப்ரினன்ட், முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு, பான் கி மூனின் றுவாண்டா ஆகிய தலைப்புகளிலும் வெளிவந்துள்ளன. இது இவரது முதலாவது குறுநாவல் தொகுதி. ஐந்து குறுநாவல்கள்- அகல், சித்தப்பாவின் கதை, உலகின் மிக நீண்ட கழிவறை, நெடுநீர் முழை, எனக்குச் சொந்தமில்லாத பூமியின் கடல், ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டவை.