திருமலை இ.மதன் (இயற்பெயர்: இந்திரசூரிய பிரேமச்சந்திரன் அசோக்). திருக்கோணமலை: அம்மா பதிப்பகம், 31/1, சமாது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2018. (திருக்கோணமலை: எஸ்.எஸ்.டிஜிட்டல்).
xxix, 288 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 19×13 சமீ., ISBN: 978-955-53160-1-9.
இந்நாவலிலே பிரதானமாக நிலோஜனி, நிரோஷன், சுந்தரேசன், அன்பரசி ஆகிய நான்கு பேருடைய காதல் விவகாரம் பேசப்பட்டுள்ளது. நிலோஜனி நிரோஷன் மீது கொண்ட காதல், சுந்தரேசன் நிலோஜினி மீது கொண்ட காதல், அன்பரசி சுந்தரேசன் மீது கொண்ட காதல் என மூன்று காதல் விவகாரங்கள் மென்மையாகவும் கண்ணியமாகவும் சொல்லப்பட்டுள்ளது. விரசம் ஏதுமின்றி அவதானமாகவும் அளவாகவும் வார்த்தைகளை ஆசிரியர் கையாண்டுள்ளார். இளமையின் ஈர்ப்பு காரணமாக ஏற்பட்ட ஒரு காதலில் இருந்து விலகவேண்டிய சூழ்நிலையை நிலோஜனி புரிந்துகொள்கிறாள். பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் தன்னை வளர்த்து ஆளாக்கிய தாயின் விருப்பத்தையும் பிரிந்திருக்கும் தங்கள் குடும்பங்களை இணைப்பதற்கு ஏற்ற விதமாகவும் தன் முடிவை எடுக்கின்றாள். நிறைவேறாத காதலினால் விபரீதமான வழிகளில் சென்று வாழ்க்கையை பாழடித்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதையும், தமக்கென விதிவசத்தால் அமையக்கூடிய வாழ்க்கையை சிறப்பாக ஆக்கிக்கொள்ள முயல்வதே நல்லது என்பதையும் இந்நாவல் வழியாக ஆசிரியர் புரியவைக்கின்றார்.