சேனன். சென்னை 600026: கருப்புப் பதிப்பகம், இல. 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வட பழநி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).
208 பக்கம், விலை: இந்திய ரூபா 210.00, அளவு: 21.5×14 சமீ.
‘ஈழப்போராட்ட நாவல்கள் வரலாறு குறித்தும் யதார்த்தச் சொல்நெறியாலும், தப்பினால் வரலாற்றை மறுக்கும் மிகுகற்பனைகளாலும் ஆனதாகவே இருந்து வந்திருக்கின்றன. கையறுநிலை விரக்தியாகவும் கேலிப்புன்னகையாகவும் அபத்தக்கனவாகவும் சமவேளையில் தோற்றம் காட்டும், தீராத வலியையும் ஆற்றமுடியாத சீற்றத்தையும் அடிநாதமாகக் கொண்டிருக்கும் சேனனின் ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவல், வரலாற்றினுள்ளும் வரலாறு கடந்தும் நின்று, தொன்மங்கள், வரலாறு, அதிபுனைவு, சமகால யதார்த்தம் என அனைத்தையும் மேவி நமது நெடிய யுகத்தின் கதையாக ஆகியிருக்கிறது’. (ஜமுனா இராஜேந்திரன்). சின்னச்சின்ன சம்பவங்களாக பல்வேறு காலகட்டங்களுக்கு இந்நாவல் தாவுகிறது. அரசியல் பிரச்சினையிலிருந்து சிறிய யுத்த சம்பவங்கள் வரை அனைத்துக்கும் பின்னே சித்தார்த்தன் இருக்கிறான். சித்தார்த்தனை அரூப நிலையில் வைத்துக்கூட அணுகலாம். பௌத்தமாக, பௌத்த அதிகாரமாக, கருணையாக என்று பல்வேறு பரிமாணங்களை அந்த பாத்திரம் இந்நாவலில் எடுக்கிறது.