நஸ்பியா அஜீத். யாழ்ப்பாணம்: திருமதி நஸ்பியா அஜீத், காதி அபூபக்கர் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவர் 2015. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி).
xiv, 102 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-42109-0-5.
‘சிதறல்களில் சில துளிகள்’ என்ற நாவலும், ‘கவிதையில் நனைவோம்” என்ற கவிதைத் தொகுப்பும் இந்நூலில் ஒருங்கே இணைத்துத் தரப்பட்டுள்ளன. திருமதி நஸ்பியா அஜீத், யுத்தகாலத்தில் 1990களில் வடக்கிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட போது இடம்பெயர்ந்து புத்தளத்தில் 25 வருடங்களாக வசித்து வந்தவர். யுத்தம் முடிவுற்ற பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் வரலாற்று ஆசிரியராவார். ‘சிதறல்களில் சில துளிகள்’ என்ற நாவலில் யாழ்ப்பாண முஸ்லீம்களின் வெளியேற்றத்தால் நிகழ்ந்த அவலங்கள், அவர்கள் எதிர்நோக்கிச் சிதறுண்ட அழகான அமைதியான வாழ்க்கை, அம்மக்களின்-குறிப்பாக முஸ்லிம் பெண்களின் கல்விக்குத் தடையான காரணிகள், பெற்றோர்-பெண்- தாய்மை என ஒவ்வொருவரினதும் கடமைகள் பற்றிய சமூகப் பார்வை, வடகிழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பினரால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அமைக்கப்பட்ட மீள்குடியேற்றக் கிராமங்களின் நிலை, வட கிழக்கிற்கு வெளியேயான அக்கிராமங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து அகற்றப்பட்ட முஸ்லிம்களுக்கான மீள்குடியேற்றக் கிராமங்கள் ஏதும் இல்லாமை என்பன போன்ற பல கருத்துக்கள் இந்நாவலை நகர்த்திச் செல்கின்றன. ‘கவிதையில் நனைவோம்’ என்ற பகுதியில் உள்ள கவிதைகள் அனைத்தும் ஆசிரியரின் ஏக்கங்களாகவே அமைந்துவிடுகின்றன. சமூகச் சிதறலினால் எவ்வகையில் பெண்கள், குழந்தைகள் கண்ணீர் வடிக்க நேரிட்டது என்பதை இக்கவிதைகள் புலப்படுத்தத் தவறவில்லை. ஆசிரியரின் முதலாவது நூலான ‘கண்ணீர்ப் பூக்களை’ தொடர்ந்து வெளிவரும் இரண்டாவது பிரசுரம் இது.