கெக்கிராவ ஸஹானா (மூலம்), கெக்கிராவ ஸுலைஹா (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
viii, 180 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-65-8.
இந்நூலில் கெகிறாவ ஸஹானா (சித்தி ஜஹானறா 27.04.1968-20.09.2018) எழுதி வைத்திருந்தவையும் போட்டிகளுக்கு அனுப்பியவையுமான சில துளி வானம், உயிர் மூச்சாய் நிறைந்திடு காற்றே, கிறுக்கல் ஆகிய மூன்று குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. ‘சில துளி வானம்’ என்ற குறுநாவல், யுத்தத்தின் பின்னரான இலங்கையில் தற்போது பூதாகாரமாகப் பெருகிவரும் சில பிரச்சினைகளை சாதாரண கதாமாந்தர்களின் கருத்துகளுடன் மோதவிட்டு அது பற்றி ஆராய்கின்றது. ‘உயிர் மூச்சாய் நிறைந்திடு காற்றே’ என்ற நாவல் தன் பருவகாலத்தின் கனவுகளைப் பதுக்கிவைத்துவிட்டு கையில் கிடைத்த ஜீவிதத்தை மனத்திருப்தியுடன் வாழும் ஒரு கிராமத்துப் பெண்ணின் உள்ளத்து உணர்வுகளை பகிர்கின்றது. ‘கிறுக்கல்’ என்ற குறுநாவல் மூளை வளர்ச்சி குன்றிய (னுழறெ ளுலனெசழஅந) சிறார்களும் அவர்களைப் பேணும் பெற்றோரும் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகளை, அனுபவங்களை, மன வலிகளை ஆசிரியரே உள்வாங்கி அனுபவித்து எழுதப்பட்ட கதையாகும். இக் குறுநாவல் தொகுப்பு, 173ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. கெகிறாவ ஸஹானா கெக்கிராவைக்கு அருகிலுள்ள மரதன்கடவல என்ற கிராமத்தில் பிறந்தவர். ஏற்கெனவே பத்து நூல்கள் வரை எழுதி வெளியிட்டுள்ளவர்.