யோ.புரட்சி. முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
xiv, 127 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-4096-25-7.
இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டே இருப்பதில் புரட்சிக்கு நிகர் அவரே தான். ஈழமெங்கும் அலைந்து திரிந்து தேடலை நிகழ்த்தும் புரட்சியின் விழிகளில் ஒரு வித்தியாச வெளிச்சம் தென்படுகின்றது. குருதியில் நனைந்தெழும் போர் எழுத்துக்கள் மட்டுமே புறப்பட்டு வந்த பூமியிலிருந்து அந்த நெடியே கிஞ்சிற்றும்; இல்லாத ஒரு கிராமிய வாழ்வியலை நிலைநிறுத்துகிறது ‘செல்லமுத்து” நாவல். வன்னிக் காடுகளில் புறநானூறுகள் மட்டுமல்ல, அழகிய அகநானூறுகளும் பூக்கின்றன என்னும் புதிய உண்மையை புரட்சி விரல்களின் வழி புரிந்துகொள்ள முடிகிறது. மலையகப் படைப்புகளில் மட்டும் அதிகமாய் தரிசித்து வந்த அடிநிலை மக்களின் கண்ணீர்க் கதைகளை ஈழப்போர் முடிந்த பகுதியிலும் அதிகம் நாம் கேட்காத ஒரு புதிய மொழியில் கேட்கவைத்திருக்கிறார் யோ.புரட்சி. தகவல் தொடர்பு வசதி முற்றிலும் முகவரியற்றுக் கிடக்கும் அந்தக் கிராமத்து அவலங்களை அக்கால அரும்பெரும் வாழ்வை தன் எழுதுகோலில் வழியவிடுவதில் 100 வீதம் வெற்றிகண்டு இளைய நம்பிக்கையாய் காட்சி தருகிறார். வெடிகுண்டுகளின் சத்தமில்லாத பதுங்குகுழிகளுக்கு அப்பாலிருந்து ஒரு வாழ்க்கையைக் கண்டெடுத்து கட்டமைத்திருப்பது ஈழப்படைப்பு வெளியில் ஒரு புதுமை (பேராசிரியர் முனைவர் சா.உதயசூரியன், அணிந்துரையில்).