ஜே. வஹாப்தீன். கல்முனை: தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம், 1வது பதிப்பு, நவம்பர் 2018. (சாய்ந்தமருது: ரோயல் பிரின்டர்ஸ்).
xiv, 189 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52409-3-2.
புதிய தலைமுறை எழுத்தாளர் ஜே.வஹாப்தீன் ஒலுவில் பிரதேசம் சார்ந்து எழுதியுள்ள கலவங்கட்டிகள், குலைமுறிசல் ஆகிய நாவல்களைத் தொடர்ந்து வெளிவரும் மூன்றாவது நாவல் இது. ஒலுவில், கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டக் கடற்கரைக் கிராமங்களுள் ஒன்று. வங்கக் கடலாலும் பரந்து விரிந்த வயல்களாலும் வானுயர் தென்னந் தோப்புகளாலும், களியோடை என்னும் சிற்றாறாலும் ஆங்காங்கே ஊடறுத்து வலை பின்னி ஓடும் கையோடைகளாலும் வளமும் அழகும் பெற்ற ஊர். வஹாப்தீன் அந்த ஒலுவில் மண்ணின் மைந்தர். அந்த மண்ணின் பின்னணியில் இந்நாவலும் நகர்த்தப்படுகின்றது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்-இலங்கை இன முரண்பாட்டின் உச்ச நிலையில்- முஸ்லிம்கள் பெற்றிருந்த பலத்தின் பலனாகக் கிட்டியவற்றுள் ஒன்றே ஒலுவில் துறைமுகம். மனிதன் ஒன்று நினைக்கத் தெய்வம் வேறொன்று நினைப்பது போல, வரப்பிரசாதம் என்று வேண்டிப் பெற்ற இத்துறைமுகம், ஒலுவில் கிராமம் இயல்பாகவே பெற்றிருந்த வரங்களையெல்லாம் கபளீகரம் செய்யும் கரையோர மண்ணரிப்புக்கு ஆளாகிவிட்டது. கிராமத்தின் பிரதான வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடித் தொழிலில் அது மண்ணள்ளிப் போடுகிறது. ஒரு குறுகிய காலத்துள் ஒலுவில் கிராமம் எய்திய அந்த அவலத்தின் கலாபூர்வமான தோற்றப்பாடே இந்த நாவல். அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு, சூழலியல், பிரதேசம் ஆகிய பன்முக பரிமாணங்கள் கொண்டதாக பல தளங்களில் நின்று இந்நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூல், 2019ம் ஆண்டுக்கான இந்திய திருப்பூர் இலக்கிய விருது, கிழக்கு மாகாண சாஹித்திய விருதுகளைப் பெற்றது.