ராஜாஜி ராஜகோபாலன். சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர்).
416 பக்கம், விலை: இந்திய ரூபா 450., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-89857-55-9.
ஈழப் போர்ச்சூழலின் மையத்தில் நிற்கும் பல்வேறு நாவல்களில் இருந்து மாறுபட்டு, அதே காலகட்டத்தில், ஆனால் போரிலிருந்து தள்ளி நின்று, போரின் விளைவுகளையும் அதன் சுவடுகளையும் மட்டும் தொட்டுக்கொண்டு, இந்நாவல் மனித வாழ்வியலை வரலாற்றுச் சுவடுகளாக பதிவும் செய்கிறது. இதன் கதை, ஆசிரியர் வாழ்ந்த புலோலிக் கிராமத்தினதும் அதற்கு அண்மையில் உள்ள வல்லிபுர மாயவன் கோவிலினதும் மண்ணுக்கும் மக்களுக்கும் மிக நெருக்கமானது. அங்கு நிலவும் வாழ்வியல் அம்சங்களையும் இயல்புகளையும் கலாச்சாரக் கூறுகளையும் வழக்காற்று மொழியையும் நுட்பமாகக் கையாளும் நாவலாக மலர்ந்துள்ளது. ‘நாராயணபுரம்: எனது ஐந்தாண்டுகால இலக்கிய வேள்வி. எனது மண்ணுக்கும் மக்களுக்கும் நான் கூறும் நன்றியுரை. போரைப் புறந்தள்ளி மானுடத்தை நேசிக்கும் ஒரு சாமானியனின் வாக்குமூலம். அன்பு, காதல், தியாகம், நட்பு எனும் அறங்களைப் போற்றும் பிரகடனம். இதனை வாங்கி வாசிக்கும் இதயங்களை வரவேற்று வாழ்த்துகிறேன்’ (முன்னுரையில் -ராஜாஜி ராஜகோபாலன்). கனடாவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாழும் ராஜாஜி ராஜகோபாலன் எழுபதுகளின்போது எழுத்துத் துறையில் காலடி பதித்தவர். இவரின் கவிதைகள், சிறுகதைகள், நாவல் என்பவை இவர் பிறந்து வளர்ந்த ஈழத்து வடபுலத்தின் சமூக, பண்பாட்டுக் கோலங்களையும் அனுபவங்களையும் ஏக்கங்களையும் பேசுகின்ற எழுத்துப் பிரதிகளாகக் கவனம் பெறுகின்றன. இதனால் இன்று இவர் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் தனித்துவமாக அறியப்படுகிறார்.