செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பதிப்பகம், 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, மே 2012. (சென்னை 600026: குமரன் பதிப்பகம், 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது தெரு, வடபழநி).
192 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 18×12.5 சமீ.
மார்க்சியக் கோட்பாடுகளினூடு தான் உள்வாங்கிய கருத்தியல்களை தனது நாவல்களில் சம்பாஷணைகளினூடாக விதைத்துச் செல்லும் பாணி செ.க.வினுடையது. இந்நாவலில் ஒரு பேராசிரியருக்கு மல்லிகை, முல்லை, தாமரை என மூன்று பெண்கள். முதலிரண்டு பெண்களின் திருமணத்துடன் பேராசிரியர் கடனாளியாகிவிட்டார். தாமரையை அவரது மாணவன் கோபாலன் திருமணம் செய்வான் என எதிர்பார்த்தார். ஆனால் அவன் நோர்வேயில் பணிபுரியும் நண்பனுக்கு அவளை செலவின்றி திருமணம் செய்து வைக்கிறான். நான்கு ஆண்டுகளின் பின்னர் கனடாவில் குடியேறிய தாமரை தந்தையார் மரணத்திற்காக சென்னைக்கு மீண்டும் வருகிறாள். அவளது சோகக் கதையைக் கேட்டு கோபாலன் அதிர்ச்சியடைகிறான். அவனது தப்புக் கணக்கிற்கு தாமரை தண்டனையோடு விமோசனம் தேடுகிறாள். எதிர்மறைகளின் ஒற்றுமை என்ற முன்னைய நாவல் மார்க்சின் முதலாவது கோட்பாட்டின் அடியானது. குடும்ப முரண்பாடும்- பகைமையற்ற முரண்பாடுகள், பகைமை முரண்பாடுகள் என குடும்ப வாழ்வையும் பிரிக்கும். தாமரை முன்னையதை வேண்டுகிறாள். மார்க்சின் இரண்டாவது கோட்பாடு மறுப்பியலின் மறுப்பியல்-பறித்தெடுப்போர் பறித்தெடுக்கப்படுவர் எனவும், மூன்றாவது கோட்பாடு அளவு மாறுபாடு, குண மாறுபாடு அல்லது முதலாளிகள் தொழிலாளர் போராட்டத்தின் போது சலுகையாக வழங்குவாரே அன்றி மூலதன வளர்ச்சியை மற்றாக இழந்துவிட மாட்டார்கள். சோசலிசப் புரட்சியின் போதே முழுமையாகப் பறித்தெடுக்க முடியும் என்பார் பேராசிரியர். மேலும் நாட்டியம், நடனம், நாடகம், நாவல், ஓவியம், சிற்பம் ஆகிய பண்பாடு சார்ந்த உற்பத்திகள் இன்று பண்பாட்டு உற்பத்தியாக, பண்டமாக சினிமா வரை சந்தைக்கு வந்துள்ளது என்பார்.