சிவ தியாகராஜா. கொழும்பு 6: புனைவகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
ix, 270 பக்கம், வண்ணப் படங்கள், விலை: ரூபா 700., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0350-18-6.
பூதத்தம்பி கோட்டை என்னும் இந்த நெடுங்கதை 17ஆம் நூற்றாண்டில் இலங்கையில் யாழ்ப்பாணத்தை டச்சுக்காரர் ஆட்சிபுரிந்த காலத்தில் அவர்களது அரசில் முதல் மந்திரியாகப் பணிபுரிந்த பூதத்தம்பி முதலியாரைப் பற்றிய வரலாற்று நவீனமாகும். சில யாழ்ப்பாண வரலாற்று நூல்களிலும், பூதத்தம்பி நாடகங்களிலும், வழிவழி வந்த பாரம்பரிய மரபு ஞாபகங்களிலும் கூறப்படும் சம்பவங்களைக் கொண்டு இந்த நவீனம் புனையப்பட்டிருக்கிறது. இந்த வரலாற்று நெடுங்கதை 2016-2018 ஆண்டுகளுக்கிடையே பிரித்தானியாவிலிருந்து வெளிவந்த ‘புதினம்’ மாதப் பத்திரிகையில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டுதல்களைப் பெற்ற புதினமாகும். நூலாசிரியர் சிவ தியாகராஜா தொல்லியல், மனித மானுடவியல், மருத்துவம், வரலாற்றியல் ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியவர். நீண்டகாலம் லண்டனில் மருத்துவராகப் பணியாற்றியுள்ளதுடன், தனது துறைசார் ஆய்வுகளுக்கிடையே அவ்வப்போது சில நாவல்களையும் படைத்திருக்கின்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து B.Sc. பட்டத்தையும், கொழும்பு மருத்துவக் கல்லூரியிலிருந்து M.B.B.S. பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph. D. பட்டத்தையும் பெற்றவர். இவரது சில ஆய்வு நூல்கள் இலங்கைப் பல்கலைக்கழகங்களிலும் தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களிலும் துணையாதார நூல்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.