சிவநயனி முகுந்தன். கனடா: வித்தக விருட்சம், 1வது பதிப்பு, 2012. (கனடா: Q Copy and Print Centre).
625 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சிவநயனி. இளவயதிலேயே சிறுகதை ஆசிரியராக அறியப்பட்டவர். 2005ஆம் ஆண்டு ‘தமிழர் செந்தாமரை’ இதழ் இவரது சாரை என்ற சிறுகதைக்கு முதற்பரிசை வழங்கி கௌரவித்தது. தொடர்ந்து 2006இல் கனடா மகளிர் அமைப்பினர் இவரது சொந்த மண் என்ற கதைக்கு முதற்பரிசை வழங்கி ஊக்குவித்தனர். இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு மாறுமோ நெஞ்சம் என்ற பெயரில் 2007இல் வெளிவந்தது. தற்போது வெளிவந்துள்ள ‘வேல்விழியாள் மறவன்” ஈழம் சார்ந்ததொரு வரலாற்று நீள்கதையாகும். சோழ வேந்தனான கரிகாலனை பிரதம கதாபாத்திரமாகக்கொண்ட கதை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உறையூரை ஆண்ட சோழ மன்னன் கரிகாலன், அனுராதபுரத்தை ஆட்சிசெய்து வந்த வங்கநாசிகதிஸ்ஸன் என்ற மன்னனுடன் போரிட்டு அவனை வென்று, பன்னிரண்டாயிரம் இலங்கை வீரர்களைத் தன்னுடன் உறையூருக்கு அழைத்துச் சென்று காவிரி ஆற்றிற்கு கல் அணைகட்டிய வரலாற்றின் பின்னணியில் கதை வளர்கின்றது. சோழ மன்னன் கரிகாலன் ஏன ஈழத்திற்குச் சென்றான் என்ற கேள்விக்கு தெளிவான வரலாற்றுப் பதிவில்லாத நிலையில் சிவநயனி தனது கற்பனையை அங்கு காதல் கதையொன்றாக கட்டமைக்கிறார். பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, புறநானூறு போன்ற நூல்களை தனது நாவலின் அநபாயன், பூங்கோதை, நரசிம்மவரையர், ஜெயபாலசிங்கன், சோதையன், மைத்திரேய தேரர் முதலிய பாத்திர வார்ப்பிற்கு பயன்படுத்தியுள்ளார்.