கத்யானா அமரசிங்ஹ (சிங்கள மூலம்), எம்.ரிஷான் ஷெரீப் (தமிழாக்கம்). கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல. 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2020. (கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல. 202, செட்டியார் தெரு).
xvii, 201 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-3491-38-1.
சிங்கள இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர் கத்யானா அமரசிங்ஹ. புனைகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகத்திறமை மிக்க இவர், ஊடகத்துறையிலும் தீவிரமாகச் செயற்படும் சமூக, அரசியற் செயற்பாட்டாளராவார். இலங்கையின் சமகால சமூக, அரசியற் பிரச்சினைகளில் மிகுந்த தெளிவு மிக்கவராகத் தன்னை வாசகரிடையே இனம்காட்டி வருபவர் கத்யானா. தரணி நாவலின் இயங்குதளம், துலன்யா என்னும் பெண்ணொருத்தியின் வாழ்வு பற்றிய, அவளைப் பல்வேறு விதங்களிலும் பாதித்த ஆளுமைகளைப் பற்றிய அவளது எண்ணங்களின் தொகுப்பாகக் காணப்படுகின்றது. அடிப்படையில் தூய காதல் உணர்வுகளை மையமாக வைத்துப் பின்னப்பட்ட நாவலென்றும் இதனைக் கூறலாம். கதாபாத்திரங்களின் காதல் உணர்வுகளை துலன்யாவின் எண்ணங்களின்; வாயிலாகக் கதாசிரியர் விபரித்துச் செல்வதுடன், துலன்யாவின் காதல் உணர்வுகளையும் ஆங்காங்கே வெளிப்படுத்துகின்றார். மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையில் மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் தனது நூல்களுக்காக இதுவரை இலங்கை அரச சாகித்திய விருது, கனடா இயல் விருது, இந்தியா வம்சி மற்றும் வாசகசாலை விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நாவலும் 2019ஆம் ஆண்டு ‘ஸ்வர்ண’ புத்தக விருதுக்காக இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி ஒரு லட்சம் ரூபா பணப்பரிசை வென்றிருந்தது.