சின்னத்தம்பி சந்திரசேகரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 112 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-675-5.
இந்நூல் மட்டக்களப்புத் தமிழர்களின் கலை, இலக்கிய, பண்பாட்டு மரபுகளை மையப்படுத்தி எழுதிய கட்டுரைகளின் தொகுதியாகும். குறிப்பாக அதிகம் பேசப்படாத ஆனால் ஈழத்து இலக்கிய, பண்பாட்டுப் புலங்களில் பதிவுசெய்யப்படவேண்டிய பிரதேச நிலைப்பட்ட கலை இலக்கிய முயற்சிகள், பண்பாட்டு மரபுகள் பற்றி இக்கட்டுரைகள் பேசுகின்றன. குறிப்பாக, பல கட்டுரைகள் மண்டூர் என்ற கிராமத்தின் பாரம்பரிய பண்பாட்டுப் பின்புலத்தினுள் அவ்வப்போது மேற்கிளம்பிய முற்போக்கான இலக்கிய, பண்பாட்டு முன்னெடுப்புகளை வெளிக்கொணர்கின்றன. சில கட்டுரைகள் அடிநிலை மக்களின் பண்பாட்டு மரபுகள் பற்றிப் பேசுகின்றன. அவை அடிநிலை மக்களின் வழிபாட்டு மரபுகளைப் பதிவுசெய்வதோடு அந்த மரபுகளுக்கூடாக அவர்கள் எவ்வாறு சமூக மேனிலையாக்கத்தை நோக்கி நகர்ந்தனர் என்பதையும் எடுத்துரைக்கின்றன. நூலின் இறுதிப் பகுதி காலமாற்றத்தால் அருகிப்போய்விட்ட வாழ்விட மரபுசார் பண்பாட்டுக் கூறுகளை நினைவுபடுத்துகின்றன. அவ்வகையில் இந்நூலில் தி.த.சரவணமுத்துப் பிள்ளையின் தமிழ்ப் பாஷை, வி.சீ.கந்தையாவின் இலக்கியப் பணி, மண்டூர் தேசிகனின் கவிதா ஆளுமை, கவிஞர் எஸ்.புஸ்பானந்தனின் கவிதைகள், மண்டூர் உருத்திராவின் கவிதைகள், பாரதி சஞ்சிகையின் இலக்கியப் பங்களிப்பும் சமூக அரசியல் பிரக்ஞையும், இராவணேசன் கூத்து: கூத்தின் புதிய வடிவம், மட்டக்களப்புத் தேசத்துக் கோயிலின் வேடர் வழிபாட்டு மரபுகள், மட்டக்களப்புத் தமிழகத்தின் பெரிய தம்பிரான் வழிபாட்டு முறை, சமஸ்கிருதமயமாக்கமும் அடிநிலை மக்களின் சமூக அசைவியக்கமும், மட்டக்களப்புத் தமிழர்களின் வீடும் வளவும் ஆகிய 11 ஆக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது.