15813 பின்காலனித்துவ நோக்கில் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்.

தம்பிப்பிள்ளை மேகராசா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 90 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-671-7.

பின்காலனியப் பார்வையில் இலக்கியங்களை அணுகுவது என்பது காலனிய அவலங்களையும், காலனிய எதிர்ப்புணர்வினையும், காலனிய ஓர்மையையும் நம்மையறியாமல் வெளிப்படும் காலனிய மனத்தையும் அடையாளம் கண்டு சுதேசியச் சிந்தனையை வளப்படுத்தும் வாய்ப்புகளை முன்னிறுத்துவதாகும். த.மேகராசா அவர்களின் பின்காலனித்துவ நோக்கில் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் என்னும் இந்நூலும் அத்தகையதொரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. பின்காலனியக் கோட்பாட்டையும் அதன் முன்னோடிகளையும் அறிமுகம் செய்து இலங்கையில் காலனியம் நுழைந்த வரலாற்றையும் காலனியத்தால் ஏற்பட்ட சமூக அசைவியக்கங்களையும் இந்நூல் விபரிக்கின்றது. அதனை பின்காலனித்துவம் கோட்பாட்டுப் புரிதல், இலங்கையில் காலனியாதிக்க ஊடுருவல், பின்காலனித்துவமும் ஈழத்துத் தமிழ்க் கவிதைகளும், ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் பின்காலனித்துவக் கருத்தியலின் போதுமையும் போதாமையும் ஆகிய நான்கு இயல்களின் வழியாக விபரிக்கின்றது. நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு இளங்கலைமாணி, முதுதத்துவமாணி பட்டங்களைப் பெற்றிருப்பதுடன் அதே பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டப்படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.

ஏனைய பதிவுகள்