த.சண்முகசுந்தரம். சுன்னாகம்: அமரர் சீனியர் கிருஷ்ணபிள்ளை நினைவு வெளியீடு, 223, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
இந்நூலில் அமரர் த.சண்முகசுந்தரம் அவர்கள் எழுதிய ஆறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ‘புலமைக் குரல்கள் தலைப்பாகைகள் பேசின’ என்ற கட்டுரையில் பாரதியாரையும் பாவலர் துரையப்பா பிள்ளையையும் ஒப்புநோக்கி அதனூடாக பாவலரின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றார். ‘பண்டிதமணியின் பார்வையில் ஈழத்துத் தமிழ்ப் புலவர்’ என்ற கட்டுரை பண்டிதமணி பற்றியும் ஈழத்துப் புலவர்களின் முக்கியத்துவத்தை அவர் எவ்வாறு நிறுவினார் என்பது பற்றியும் சில முக்கியமான தகவல்களை தருகின்றது. ‘பேராசிரியர் வித்தியானந்தன் பரம்பரை’ என்ற கட்டுரை பேராசிரியர் பற்றிய முழுமையானதொரு சித்திரத்தை தருகின்றது. ‘யாழ்ப்பாணத்து மாட்டுவண்டிச் சவாரி’ நீண்ட காலமாக யாழ்ப்பாணக் கிராமங்களில் நிலவிவந்த ஒரு பொழுதுபோக்கு விளையாட்டுப் பற்றிய ஒரு விரிவான விளக்கத்தைத் தரும் கட்டுரை. நாட்டாரியல் நோக்கிலும் பண்பாட்டு நோக்கிலும் இது முக்கியமானது. ‘ஈழத்திற் சைவக் கிராமிய வழிபாடு’ சற்று விரிவான முறையில் இலங்கையில் சைவத் தமிழர் மத்தியில் வழங்கிவரும் கிராமிய, சிறுதெய்வ வழிபாட்டு முறைகளையும் நவீனத்துவச் செல்வாக்கினால் அவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் நுட்பமாக விளக்குகின்றது. ‘சித்தர் பரம்பரை-ஓர் ஆய்வு’ என்ற கட்டுரையைப் பொறுத்தவரையில், உமர் கய்யாம் போன்ற சூஃபி மெய்ஞானக் கவிஞர்களையும் சித்தர்களையும் இணைத்து நோக்குவதில் சில பிரச்சினைகள் உள்ளன எனினும் இக்கட்டுரை தரும் சித்தர் பற்றிய பொதுவான விளக்கமும் ஈழத்துச் சித்தர் நெறி பற்றிய குறிப்புகளும் முக்கியமானவை. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34331).