இ.சு.முரளிதரன். பருத்தித்துறை: திருமதி சுப்பிரமணியம் பொன்னம்மா நினைவு வெளியீடு, ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
vi, 49 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
ஆசிரியரின் தாயாரின் 31ஆம்நாள் நினைவு வெளியீடாக கம்பராமாயணம் குறித்து அவர் எழுதிய பத்துக் கட்டுரைகளின் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ள நூல். இதிலுள்ள கம்பராமாயணத்தில் அறிவியல், கம்பனும் வண்ணத்துப் பூச்சி விளைவும் ஆகிய கட்டுரைகள் அறிவியல், உளவியல் பார்வைகளினூடான மறுவாசிப்பாகவும், கம்பனும் ஒரு கலகக்காரன், மந்தரையும் கருத்தியல் மறு அமைப்பாக்கமும், கம்பனின் சொற்கட்டுமானம்-பாலகாண்டத்தை முன்வைத்து, கிட்கிந்தா காண்டத்தில் தவளை, சுந்தரகாண்டத்தில் மீ, விந்தை மொழி வங்கியில் விழி, கம்பனை நகலெடுத்த திரையிசைப் பாடலாசிரியர்கள், வில்லனும் வில்லியும் ஆகிய மற்றைய 8 கட்டுரைகளும் இரசனைத் திறனாய்வுகளாகவும் அமைந்துள்ளன. தலைப்புக் கட்டுரையில் கடவுளின் துணிக்கையை நெருங்கும் துகள் ஒன்றினை இரணிய வதைப்படலத்தில் கம்பர் வெளிப்படுத்தி உள்ளதாகக் குறிப்பிடும் ஆசிரியர், கம்பராமாயணம் உருவான 12ம் நூற்றாண்டிலேயே உலகை மட்டை வடிவில் கற்பனை செய்திருந்ததையும் வியக்கின்றார். அண்மைக் காலத்தில் மன அழுத்தத்துடன் படுக்கைக்குச் செல்வோருக்கு விபரீதமான கனவுத் தோற்றங்கள் தென்படுவதை விஞ்ஞானிகள் அறிந்து தெரிவித்ததை அன்றே கம்பர் பதிவுசெய்திருப்பதையும் கூறி வியக்கின்றார். பௌர்ணமி நிலவில் பூமியை நெருங்கும் சந்திரனின் இயல்பால் ஈர்ப்புச் சக்தியில் ஏற்படும் மாற்றம் கடல் அலைகளை ஆர்ப்பரிக்கச் செய்யும் நிகழ்வினையும், புட்பக விமானத்தில் சீதையைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் ஓடுபாதையில் வேகமாகப் பயணித்து வானில் எழும் விமானத்தை அன்றே கற்பனையில் கம்பர் கண்டிருந்த விந்தையையும் ஆதாரங்களுடன் ஒப்பித்துள்ளார். ஜீவநதியின் 55ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கும் சுவையான நூல் இது.