மு.தளையசிங்கம். புங்குடுதீவு-11: மு.தளையசிங்கம், சர்வமத சங்கம், பூரண சர்வோதய இயக்கம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1974. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).
(4), xviii, 300 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
மெய்யுள் (உலக விடுதலை இயக்கம்). மு.தளையசிங்கம். சென்னை 600 083: சந்தியா பதிப்பகம், 52 (பழைய எண் 7), முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக் நகர், 1வது பதிப்பு, 2002. (சென்னை 600 005: மணி ஆப்செட்).
152 பக்கம், விலை: இந்திய ரூபா 50.00, அளவு: 21.5×14 சமீ.
புதுயுகம் பிறக்கிறது (பதினொரு சிறுகதைகள், 1965), போர்ப்பறை (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் தொகுப்பு, 1970) ஆகிய நூல்களை எழுதிய மு.தளையசிங்கம் ஆசிரியரின் மற்றுமொரு படைப்பு இதுவாகும். தான் நம்பிய, வரித்துக்கொண்ட தத்துவத்தைத் தன் வாழ்விலே பரீட்சித்துப் பார்த்த பின்னரே அதைச் சமூகத்தில் பிரயோகித்தவர் மு.தளையசிங்கம். இதனால் மரபு சார்ந்த இலக்கிய நடைமுறைகளை அவர் பல தடவைகளில் கட்டுடைத்தார். ‘மெய்யுள்’ என்ற இப்படைப்பு அத்தகையது. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் உருவம் அது. ‘இது காலவரையுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. கற்பனைக் கோலங்கள் அனைத்தையும் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய கலை இலக்கிய வடிவமே ‘மெய்யுள்’ என அவர் தனது முன்னுரையில் கூறுகிறார். இத்தொகுப்பில் ‘மு.த. வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு’, ‘மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள்’ ஆகிய உரைகளைத் தொடர்ந்து மு.தளையசிங்கத்தின் 12 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. பூரண இலக்கியங்களும் அதன் தேவைகளும், மெய்யும் உள்ளும் மெய், புதுயுகமும் அதை நோக்கிய மாற்றங்களும், வர்க்கவியலும் குணவியலும், பரிணாமம்-அதன் தூக்க, கனவு, விழிப்பு தூரிய நிலைகள், கலப்பு வலயம், மெய் முதல் வாதம், ஒளிபடைத்த கண்ணினாய், ‘நான்’ நாகரீகத்தின் அழிவும் ‘நாம்’ நாகரீகத்தின் எழுச்சியும், வந்துவிட்டது சத்திய யுகம் – விழித்தெழுங்கள், அண்டை வீடுகள், கலைஞனின் தாகம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 02609).