றிப்தி அலி (இயற்பெயர்: A.A.M.றிப்தி அலி). கொழும்பு: T.R.மீடியா நெட்வேர்க், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 12: பேர்பெக்ட் பிரின்டர்ஸ்).
vii, 46 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-4054-00-4.
றிப்தி அலி கல்முனையைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு ஊடகவியலாளர். இளம் வயதிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளராகவும், பின்னர் பொதுச் செயலாளராகவும் தெரிவுசெய்யப்பட்டவர். 10.11.2013 முதல் ஒருவார காலம் பலஸ்தீனத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இவர், பலஸ்தீனத்தின் முக்கிய நகரங்களான ஜெருசலம், கிப்ரூன், பெத்லஹேம், ரமல்லா உள்ளிட்ட பல இடங்களுக்கும் பயணித்திருந்தார். இப்பயணக் கட்டுரையின் வழியாக, சர்வதேச முஸ்லிம் உம்மாவின் முதல்தர பிரச்சினைகளில் ஒன்றான பலஸ்தீன விவகாரத்தின் பக்கம் வாசகரின் கவனத்தை ஈர்க்கின்ற ஒரு தார்மீகக் கடமையை நிறைவேற்ற முயற்சி செய்துள்ளார். காஸாவுக்கு செல்லும் வாய்ப்பு நூலாசிரியருக்குக் கிட்டாதமையால், இவ்வாக்கம் காஸாவின் கண்ணீர் கதையை சொல்லத் தவறியிருக்கிறது. ஆனாலும் பலஸ்தீன மக்களின் வாழ்வியல் அவலத்தை உணர்ச்சிபூர்வமாக முன்வைக்கும் இவ்வாக்கம் இஸ்ரவேலும், யூத ஸியோனிஸவாதிகளும் பலஸ்தீன மண்ணில் அரங்கேற்றும் அராஜகத்தையும் அநீதியையும் அட்டூழியங்களையும் தான் கண்ட அனுபவங்களாகவும், சுய சாட்சியங்களாகவும் பதிவுசெய்கின்றது. இத்தொடர் முன்னர் ‘விடிவெள்ளி’ வாரப் பத்திரிகையிலும் ‘விடியல்’ இணையத்தளத்திலும் ஒன்பது தொடர் கட்டுரைகளாக இடம்பெற்றிருந்தன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 76637).