15900 சாந்தி அக்கா (சாந்தி சச்சிதானந்தம் 14.8.1958-27.8.2015). மலர் வெளியீட்டுக் குழு.

கொழும்பு 7: விழுது ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம், இல.3, டொறிங்டன் அவெனியு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).

122 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

சாந்தி சச்சிதானந்தம் இலங்கைத் தமிழ் அரசியல் விமர்சகரும், சமூக ஆர்வலரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், பெண்ணியவாதியுமாவார். யாழ்ப்பாணம், ஈச்சமோட்டையில் 1958 ஆம் ஆண்டில் பிறந்த இவர் கொழும்பு புனித பிரிஜெட் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை பயின்றார். பின்னர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றார். இவரது தந்தை வல்லிபுரம் சச்சிதானந்தம் லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினர். இலங்கையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 1970 நாடாளுமன்றத் தேர்தலில் நல்லூர் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டவர். மனோரஞ்சன் ராஜசிங்கம் (இறப்பு: 2009) என்பவரைத் திருமணம் புரிந்த சாந்தி சச்சிதானந்தத்திற்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். சாந்தி சச்சிதானந்தம் ஐக்கிய நாடுகள் அவையில் முன்னர் பணியாற்றியவர். பின்னாளில் விழுது மேம்பாட்டு மையம் என்ற அரச சார்பற்ற சமூக நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பணியாற்றினார். இவரது சமூகப் பணிகளுக்கு குந்தகம் விளைக்கும் வகையில் 2012 ஜனவரி 23 அன்று கொழும்பில் உள்ள விழுதுகள் நிறுவனத்தின் அலுவலகம் பாதுகாப்புப் படையினரால் உடைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. இவர் மட்டக்களப்பில் ‘மன்று” என்ற அரச சார்பற்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் சமூக அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபட்டார். சாந்தி ஆங்கிலத்திலும், தமிழிலும் பல அரசியல், சமூக ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இருக்கிறம் என்ற மாத இதழை சிலகாலம் வெளியிட்டு வந்தார். சாந்தி சச்சிதானந்தம் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் உரிமைகள் கட்சியின் சார்பில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்டகாலம் சுகவீனமுற்றிருந்த சாந்தி சச்சிதானந்தம் 2015 ஆகத்து 27 இல் கொழும்பில் காலமானார். இவரது மறைவையொட்டி இந்நினைவு மலர் அமரர் சாந்தியின் வாழ்வும் பணிகளும் பற்றிய ஆவணமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்