பால.சுகுமார் (மலர் தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
100 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5 சமீ.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் (பிறப்பு: 22.02.1951) இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக முன்னைநாள் உபவேந்தராவார். இவர் கொழும்பில் 15.12.2006 அன்று இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார். இராணுவத்தின் தீவிரக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இக்கடத்தல் நடைபெற்றுள்ளதால், பாதுகாப்புப் படையினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களே இதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவர் உபவேந்தர் பதவியில் இருந்து விலகினால் விடுவிக்கப்படுவார் என ஊடகங்களில் கடத்தல்காரர்கள் தகவல் வெளியிட்டு பதவியில் இருந்து விலகியபோதும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அவர் அநேகமாகக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே கருதப்படுகின்றது. கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் இவரை விடுவிக்கக்கோரி பணி நிறுத்தத்தை மேற்கொண்டனர். அவர் காணாமலாக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது இழப்பை பலரும் தங்கள் நினைவு அஞ்சலிகளாக வெளியிட்டிருந்தனர். அவற்றின் தொகுப்பாக இம்மலர் வெளிவந்துள்ளது. பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், அவரது மாணவர்கள், அவரை நேசித்தவர்கள் எனப் பலரும் இம்மலருக்கு ஆக்கங்களை வழங்கியுள்ளனர்.