அ.சின்னத்தம்பி (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
86 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-731-8.
அமெரிக்கன் மிஷன் சபையினரால் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட மறைப்பணியாளரான டாக்டர் எஸ்.பிஸ்க் கிறீன் அவர்களால் மானிப்பாயில் அமெரிக்க மிஷன் வைத்தியசாலை ஒன்றும் அதன் ஒரு பகுதியில் மருத்துவக் கல்லூரி ஒன்றும் இயக்கப்பட்டு வந்தன. அக்கல்லூரிக்கு அதிபராக டாக்டர் கிறீன் அவர்கள் விளங்கினார். டாக்டர் கிறீன் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கியதும், கிறீனின் மாணவரும் அவரோடு நெருக்கமாக இருந்து பணிபுரிந்தவருமான டாக்டர் சப்மன் வைத்திலிங்கம் அக்கல்லூரியின் அதிபராகப் பணியாற்றினார். உடலியங்கியல் என்னும் பாடத்துறையின் முதலாவது இலங்கைப் பேராசிரியர் இவர். யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரியின் முதலாவது அதிபராக இருந்த இலங்கைத் தமிழர். ஆங்கில-தமிழ் கலைச்சொல்லாக்கக் குழுவின் உறுப்பினர். பல மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எனும் சிறப்புகளைப் பெற்ற சப்மன் வைத்திலிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இந்நூல் தமிழ்மொழி மூலமான மருத்துவக் கல்வி வரலாற்றையும் தமிழர் சமூக வரலாற்றையும் எடுத்துரைக்கின்றது. நூலாசிரியர் அப்பாக்குட்டி சின்னத்தம்பி (1911-1986) இலங்கைப் பல்கலைக்கழகத்தின் மகப்பெற்று மற்றும் பெண் நோயியல் பேராசிரியராக விளங்கியவர். இந்நூலை தமிழாக்கம் செய்த க.சண்முகலிங்கம் அவர்கள் இலங்கை நிர்வாக சேவையில் 1971-2004 காலகட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சமூக அறிவியல், கலை, இலக்கியம், பண்பாடு ஆகிய விடயங்கள் குறித்து எழுதி வருபவர்.