சு.குணேஸ்வரன், மா.செல்வதாஸ் (பதிப்பாசிரியர்கள்). அல்வாய்: அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா நிறுவனம், 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம், இமையாணன்).
lii, 580 பக்கம், விலை: ரூபா 1500., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-51949-5-2.
சிறந்ததொரு கவிஞராகக் கால்பதித்து வேரூன்றிய திரு மு.செல்லையா (1906-1966) அவர்களின் நுண்மதியும் பன்முக ஆளுமையும் அவரை ஓர் யுகபுருஷராக மிளிரச் செய்துள்ளது. நல்ல தமிழ் ஆசிரியராக, நிருவாகியாக, தலைசிறந்த கவிஞராக, சோதிடராக ஆற்றல் மிகுந்த தலைமைத்துவப் பண்புடையவராக வாழ்ந்து காட்டியமை அவருடைய பல்பரிமாணத் திறன்களுக்குச் சான்றாகும். இப்பெருந்தொகுப்பில் அமரர் மு.செல்லையா அவர்களின் ஆக்கங்கள் தேடித்தொகுத்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், பாஷைப் பயிற்சி ஆகிய ஐந்து பிரதான பகுப்புகளின் கீழ் அவரது ஆக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக மு.செல்லையா அவர்கள் பற்றித் தமிழறிஞர்கள் எழுதிய ‘இரட்டைப் பிறவியின் இன்கவித்தூது’ (கந்தமுருகேசனார்), ‘கவிதை வானில் ஒரு வளர்பிறை’ (கனக.செந்திநாதன்), ‘வாழும் பெயர்’ (கா.சிவத்தம்பி), ‘முறைசார்ந்த கல்விப் பாரம்பரியத்தின் முதற்புள்ளி (செ.சதானந்தன்) ஆகிய நான்கு கட்டுரைகளும், அநுபந்தங்களாக மு.செல்லையாவின் படைப்புக்களின் பிரசுர விபரங்கள், அவரது வெளியீடுகளின் நூன்முகப்பு, அணிந்துரை, முன்னுரை முதலியன, அமரர் மு.செல்லையா தொடர்பான பதிவுகள் என்பனவும் இடம்பெற்றுள்ளன.