சி.அப்புத்துரை. தெல்லிப்பழை: தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்).
255 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 19.5×13 சமீ.
கலாபூஷணம் பண்டிதர் சிறீரங்கம் அப்புத்துரை அவர்களது ‘ஈழத்துத் தமிழ்ப் புலவர் வரலாறு’ என்ற நூலின் மூன்றாம் பாகம் சமகாலத்தைய ஆளுமைகளைத் தழுவியெழுந்துள்ளது. தனியாள் வரலாற்றினை மரபு வழியான தமிழ்ப் புலமை வழிநோக்கும் பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இதன் முதற்பாகம் ‘இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப் புலவர் வரலாறு’ என்ற பெயரில் 2007இலும், இரண்டாம் பாகம் அதே தலைப்பில் 2008இலும் வெளிவந்துள்ள நிலையில் மூன்றாம் பாகம் ‘ஈழத்துத் தமிழ்ப் புலவர் வரலாறு’ என்ற சுருக்கத் தலைப்புடன் 2011இல் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் எருக்கலம்பிட்டி விதானைப் புலவர், நானாட்டான் சூசைப்பிள்ளை ஆனுப்பிள்ளை, நானாட்டான் நீக்கிலாப்பிள்ளை செபமாலைப்புலவர், யாழ்ப்பாணம் அசனா லெப்பைப் புலவர், குருவில் சீனிப் புலவர், மன்னார் சூசைப்பிள்ளை, இத்திக்கண்டல் தொம்மை மரிசாற் புலவர், அக்கரைப்பற்று அப்துற்றஷீத் ஆலிம், புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன், பண்டிதமணி சு.அருளம்பலவாணர், செ.துரைசிங்கம், வை.க.சிற்றம்பலம், அளவெட்டிப் பண்டிதர் க.நாகலிங்கம், பண்டிதர் க.சச்சிதானந்தன், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, அருட்கவி சீ.விநாசித்தம்பி, மயிலங்கூடலூர் த.கனகரத்தினம், தில்லைச்சிவன், ம.த.ந.வீரமணி ஐயர், சைவப்புலவர் சு.செல்லத்துரை, கோகிலா மகேந்திரன், இரசிகமணி கனக செந்திநாதன், ஆத்மஜோதி நா. முத்தையா, அமுதுப் புலவர், க.செ.நடராசா, முருக வே.பரமநாதன், ஈழத்துப் பூராடனார் க.தா.செல்வராசகோபால், பிள்ளைக் கவி வ.சிவராசசிங்கம், வித்துவான் க.செபரத்தினம், கவிஞர் வி.கந்தவனம், பணடிதர் ம.செ.அலெக்சாந்தர், கலாநிதி நா.சுப்பிரமணியம், பொ.கனகசபாபதி, குறமகள் வள்ளிநாயகி இராமலிங்கம், தில்லையம்பலம் விசுவலிங்கம், புலவர் ம.பார்வதிநாதசிவம் ஆகிய 36 தமிழறிஞர்கள் பற்றிய வாழ்வும் பணிகளும் இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.