தி.ஞானசேகரம் (ஆசிரியர்), புலோலியூர் க.சதாசிவம், அந்தனி ஜீவா (துணை ஆசிரியர்கள்). கண்டி: ஞானம் பதிப்பகம், 19/7, பேராதனை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (கொழும்பு: விக்ரம் பிரின்டர்ஸ்).
68 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×15 சமீ.
ஞானம் இதழின் 31ஆவது இதழ் (ஒளி 3, சுடர் 7) எழுத்தாளர் கே.கணேஷ் சிறப்பு மலராக வெளிவந்துள்ளது. வழமையான நேர்காணல், சிறுகதைகள், பத்தி எழுத்துக்கள், கவிதைகளுடன், எழுத்தாளர் கே.கணேஷ் பற்றிய சிறப்புக் கட்டுரைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. ‘ஈழத்து நவீன இலக்கிய எழுச்சியில் கே.கணேஷின் பங்கு’ (கார்த்திகேசு சிவத்தம்பி), ‘கே.கணேஷ் என்ற இலக்கிய மானுடனை உலகத் தமிழுக்குத் தந்து வான்புகழ் கொண்டது மலையகம்’ (புலோலியூர் க.சதாசிவம்), ‘முதுபெரும் எழுத்தாளர் கே.கணேஷ்’ (தி.ஞானசேகரன்), ‘மணிக்கொடி தொகுப்பில் கே.கணேஷின் கதை’ (சாரல்நாடன்), ‘கே.கணேஷ்-ஒரு இலக்கியச் சுரங்கம்’ (தெளிவத்தை ஜோசப்) ஆகிய கே.கணேஷ் பற்றிய கட்டுரைகள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன. கே. கணேஷ் (02.03.1920-05.06.2004) கண்டியில் உள்ள அம்பிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்திலும், திருவையாறு ராஜா கல்லூரியிலும் கல்வி கற்றவர். 1940களின் பிற்பகுதியில் வீரகேசரியில் ஆசிரியர் குழுவிலும், 1950களில் சுதந்திரனில் செய்தியாசிரியராகவும் பணியாற்றினார். கணேஷ் தமிழகத்திலும் இலங்கையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பிப்பதில் பங்காற்றியவர். சுவாமி விபுலாநந்தரைத் தலைவராகக் கொண்ட இச்சங்கத்தின் செயலாளராக கணேஷ் விளங்கினார். 1946 இல் ‘பாரதி’ என்ற முற்போக்குக் கலை இலக்கிய இதழை கே.இராமநாதனுடன் இணைந்து தொடங்கி 1948 வரை நடத்தினார். மொழிபெயர்ப்புத் துறையில் கணேஷின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ.அப்பாஸ், லூ சுன், ஹோ சி மின், சாந்தோர் பெட்டோஃபி முதலிய எழுத்தாளர்களின் படைப்புக்களை கணேஷ் தமிழுக்குத் தந்துள்ளார். கணேஷின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை 22 ஆகும்.