க.பிரபாகரன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, நொவெம்பர் 2015. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன் அச்சகம், பிரதான வீதி).
192 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-8715-88-8.
சின்னத்தம்பி வேல்முருகு என்ற இயற்பெயர் கொண்ட ஆ. மு. சி. வேலழகன், ஆதிநாராயணன், முத்து, சின்னத்தம்பி ஆகிய பெயர்களிலும் எழுதிவருபவர். ஓர் ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான இவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திருப்பழுகாமத்தில் ஆதிமுத்து சின்னத்தம்பி, வேலாயுதர் வள்ளியம்மை தம்பதியினரின் மகனாக 12.05.1939இல் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை திருப்பழுகாமம் மெதடிஸ்த மிசன் பாடசாலையில் பெற்றவர். 1952 காலப்பகுதிகளில் ஈ.வெ.ரா. பெரியார், ப.ஜீவானந்தம், சிங்காரவேலர், பேரறிஞர் அண்ணாதுரை போன்றோரின் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு வளர்ந்தவர். 1972ம் ஆண்டிலிருந்து எழுத்துத்துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவர் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட கவிதை, சிறுகதை, உரைச்சித்திரம், நாவல்களை எழுதியுள்ளார். ‘தீயும் தென்றலும்’ என்ற கவிதைத் தொகுதி 1971இல் வெளிவந்ததைத் தொடர்ந்து இருபதுக்கும் அதிகமான நூல்களை இவர் எழுதியுள்ளதுடன், இன்னும் தொடர்ந்து வெளியிட்டு வருபவர். இந்நூல் ஆ.மு.சி.வேலழகன் அவர்களது வாழ்வையும், பணிகளையும் பேசுவதுடன் அவரது நூல்கள் பற்றிய அறிமுகமாகவும் அமைந்துள்ளது. ஆ.மு.சி.வேலழகனின் படைப்புலகம், ஆ.மு.சி.வேலழகனின் படைப்புகளும், பட்டங்களும் பாராட்டுக்களும், ஆ.மு.சி.வேலழகனின் வாழவியல் தடங்கள் (காட்சிகளும் பதிவுகளுமாய்) ஆகிய மூன்று பிரிவுகளில் விரிவாக இந்நூல் புகைப்பட சாட்சியங்களுடன் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் 72ஆவது பிரியா பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது.