15966 அரசியல் உரிமைகள் அபகரிக்கப்பட்டு இலங்கையில் அடக்கியாளப்படும் தமிழ் மக்கள்.

சபாரத்தினம் செல்வேந்திரா. தெல்லிப்பழை: தொல்தமிழ், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: வடக்கு கிழக்கு மக்கள் மன்றம், 45/4, ஸ்டான்லி கல்லூரி ஒழுங்கை, அரியாலை, 1வது பதிப்பு, ஜுலை 2020. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

92 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5067-02-2.

திரு. ச.செல்வேந்திரா அவர்களால் 2019ஆம் ஆண்டில் The Subjugated Tamil People in Sri Lanka என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலின் தமிழ் வடிவம். இலங்கை இனப்பிரச்சினையின் வரலாற்றுச் சுருக்கமும், பிரித்தானியப் பிரதமருக்கு அனுப்பப்பட்ட கோரிக்கைக் கடிதமும் அடங்கியது. ‘அறிமுகம்’ என்ற முதலாம் இயலில் உரிமை மீட்பிற்கான அரசியல் முன்னெடுப்புகள்,  ஆயுதப் போராட்டத்தின் தோற்றம், போரின் பின்னைய காலம், சிங்களவர்களின் அரசில் மனோநிலை, பிரித்தானிய அரசின் மத்தியஸ்தத்தின் அவசியம், சர்வதேச நாடுகள் எமக்கு உதவவேண்டிய அவர்களின் கடப்பாடு, இனப்பிரச்சினைக்கான நிலைத்து நிற்கக்கூடிய அரசியற் தீர்வு ஆகியவை தலைப்புகளில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ‘சுருக்கமான வரலாற்றுப் பின்னணி” என்ற இரண்டாம் இயலில், யாழ்ப்பாண இராச்சியம், போர்த்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தை அடிபணிய வைத்தமை, டச்சுக்காரர் ஆட்சி, பிரித்தானியர் ஆட்சியில் தமிழ் சிங்கள இராச்சியங்களை ஒன்றிணைத்து ஒரு நாடாக்கியமை, ஒன்றிணைக்கப்பட்ட நிர்வாக முறையை ஏற்படுத்தியமை, டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் என்பன விளக்கப்பட்டுள்ளன. ‘பிரித்தானியர் சிங்களவர்களுக்கு அதிகாரத்தைக் கைமாற்றியமை’ என்ற மூன்றாவது இயலில் சோல்பரி அரசியல் யாப்பைப் புகுத்துவதற்கு வழியமைத்த நிகழ்வுகள், சோல்பரி ஆணைக்குழுவின் இலங்கை வருகை, ஆணைக்குழுவின் சிபாரிசுகள், சோல்பரி ஆணைக்குழுவின் தோல்வி ஆகிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. ’சிங்களவர் ஆட்சியின் பிடியில்’ என்ற நான்காவது இயலில், தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகள், தமிழருக்கு எதிரான வன்முறைகள், தமிழர் மீது திணிக்கப்பட்ட அநீதியான போர், போருக்குப் பிந்திய நிகழ்வுகள் என்பன விளக்கப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்