சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).
24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.
சமூக விஞ்ஞான ஆய்வு மையம், மாதம் தோறும் வெளியிட்டுவரும் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 13ஆவது பிரசுரமாக இது வெளியிடப்பட்டுள்ளது. 1921ஆம் ஆண்டு சேர் பொன். அருணாசலம் இலங்கைத் தேசிய காங்கிரசை விட்டு வெளியேறி தமிழர் மகாஜன சபையை ஆரம்பித்ததுடன் தமிழ் இன அரசியல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. தமிழ் இன அரசியல் ஆரம்பிக்கப்பட்டு 100ஆவது ஆண்டைக் காணவிருக்கும் இன்றைய சூழலில் கடந்த நூற்றாண்டுக்கால வரலாற்றை பரீட்சித்துப் பார்ப்பதற்கும் புதிய மூலோபாயங்கள், தந்திரோபாயங்களை வகுத்துக் கொள்வதற்கும் இந்நூல் உதவுகின்றது. ஆயுதப் போராட்டத்தில் உச்ச சாதனையைக் காட்டிய நாம் அரசியல் போராட்டத்திலும் உச்ச நிலையைக் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். தமிழ் மக்கள் அரசியல் நியாயப்பாடுகளை புலமை நிலயில் தொகுத்து தாயக மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பேசுபொருளாக்காமல் இந்த உச்ச நிலையை அடைந்துகொள்ள முடியாது. இந்தச் செல்நெறியில் இச்சிறுநூலும் தனது பங்களிப்பை வழங்குகின்றது.