கந்தப்பளை தாமரை ஏ.யோகா (இயற்பெயர்: ஏ.யோகேந்திரன்). கந்தப்பளை: ஏ.யோகேந்திரன், தாமரைவள்ளி கிராமம், 1வது பதிப்பு, மே 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172, மில் வீதி).
xviii, 110 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 525., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-35644-0-5.
இந்நூல் மலைநாட்டிலுள்ள 50 பெருந்தோட்டங்களின் வரலாற்றுத் தகவல்களை சுவாரஸ்யமாகத் தருகின்றது. இதில் அடங்கியுள்ள கட்டுரைகளில் பெருந்தோட்டங்களில் காணப்படுகின்ற பாரம்பரிய அம்சங்கள், தோட்டப் பெயர்களின் விளக்கம், சமய நிலை, கோயில்களின் வரலாறு, கலை, கலாசாரப் பண்புகள், சமூகப் பின்னணி போன்ற விடயங்கள் எளிமையாகவும் கச்சிதமாகவும் தரப்படுகின்றன. ஆசிரியர் பெரு முயற்சியுடன் பல இடங்களுக்கும் நேரில் சென்று தகவல்களைச் சேகரித்துத் தந்துள்ளார். மலையக மக்களின் தனித்துவத்தை வெளிக்கொணரும் ஆய்வுக் கருவூலம். டிசம்பர் 2015 முதல் 2016ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை தொடர்ச்சியாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, மாகாணங்களுக்கு நேரில் விஜயம் செய்து, அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுடன் கலந்துரையாடிப் பெற்ற தகவல்களையும், அவை தொடர்பாகச் சேகரித்த பிற தகவல்களையும் சேர்த்து மலையகத்தின் ‘சூரியகாந்தி’ பத்திரிகையில் ‘எங்கள் தோட்டம்’ என்ற தலைப்பில் எழுதி வெளிவந்த ஐம்பது தோட்டங்களை உள்ளடக்கிய தொடரே இன்று நூலுருவில் வெளிவந்துள்ளது. நுவரெலிய மாவட்டத்திலுள்ள 38 தோட்டங்களும், கண்டி மாவட்டத்திலுள்ள 4 தோட்டங்களும், பதுளை மாவட்டத்திலுள்ள 6 தோட்டங்களும், இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 2 தோட்டங்களும் இந்நூலில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியரின் ஊரான தாமரைவள்ளி என்னும் கொங்கோடியா தோட்டமானது முதலாவது பதிவாகவும் இரத்தினபுரி பெல்மடுல்ல, நீலகாமம் தோட்டம் இறுதிப் பதிவாகவும் இடம்பெற்றுள்ளன.