அருள் செல்வநாயகம். களுவாஞ்சிக்குடி: சீர்பாதகுல சமூக கலாச்சார ஒன்றிய வெளியீடு, திருவருள் நிலையம், 1வது பதிப்பு, 1982. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).
xvii, 128 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 20×14 சமீ.
சீர்பாதர் (Seerpadar) எனப்படுவோர் இலங்கையின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் காணப்படுகின்ற வேளாண்மையை பிரதானமாகக் கொண்ட தமிழ்ச்சமூகத்தினராவர். சீர்பாதர் அல்லது சீர்பாதகுலம் என்பது சோழ இளவரசி சீர்பாததேவியின் பெயரினைக்கொண்டு பல்வேறு சாதி மக்களை ஒருங்கிணைத்து உருவானதாகக் கருதப்படுகிறது. இதனை சீர்பாதகுல கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மற்றும் உள்ளூர் நாட்டார் கதைகள் மூலம் அறியலாம். சீர்பாதகுல வரலாறு என்ற இவ்வரலாற்று நூல், மதிப்புரை (ஏ.பெரியதம்பிபிள்ளை), முன்னுரை (அருள் செல்வநாயகம்), பதிப்புரை (கு.சோமசுந்தரம், சா.தில்லையா), அணிந்துரை (F.X.C.நடராசா) ஆகிய ஆரம்ப உரைகளைத் தொடர்ந்து நாகநாட்டு அரசு, கதிரமலைக் காவலன், சீர்பாதகுலம் வகுத்தல், சீர்பாதகுலச் செப்பேடுகள், சீர்பாதகுல ஆராய்ச்சி, பாண்டியன் படையெடுப்பு, சீர்பாததேவி தீக்குளித்தல், சீர்பாதகுலத்தவர் உறையும் ஊர்கள், சீர்பாதகுலம் (ஆராய்ச்சி கட்டுரை), அருள் செல்வநாயகம் அவர்களின் ஏனைய நூல்கள் ஆகிய தலைப்புக்களில் விரிந்துள்ளது. இவ்வாய்வின் சுருக்கப் பிரதி முன்னர் சென்னையில் நடந்தேறிய இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டின் முதல் நாளன்று படிக்கப்பெற்றது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1083).