அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா. கொழும்பு 10: அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா, 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).
32 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.
எம்.ஐ.எம்.றிழ்வி அவர்களைத் தற்போதைய தலைவராகக் கொண்டியங்கும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா இஸ்லாமிய அறிஞர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும். புனித மக்கா நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் இஸ்லாமிய உலக ஒன்றியம் (Muslim World League) ஆரம்பிக்கப்படுவதற்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா ஆரம்பிக்கப்பட்டுவிட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் 1924ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்த நாடுகளில் அவர்களுக்குத் தேவையான சரியான வழிகாட்டல்களை உரிய நேரத்தில் வழங்குவதற்காக இஸ்லாமிய அறிஞர்கள் சபையின் அத்தியாவசியத் தேவை உணரப்பட்டிருந்தது. இலங்கையில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 1919ஆம்ஆண்டு இந்தியாவிலும், 1923ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவிலும் இதுபோன்ற மார்க்க அறிஞர்களின் சபைகள் உருவாக்கப்பட்டிருந்தன. அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் 90ஆண்டுக்காலச் சேவையை நினைவுகூரும் வகையில் இக்கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா பற்றிய அறிமுகத்தையும் அதன் நடவடிக்கைகள் பற்றிய தெளிவையும் வழங்குவதுடன், தவறான பரிதல்களை நீக்கி சமூகத்திற்கும் தேசத்திற்கும் சரியான விளக்கமளிக்கும் கையேடாக இது அமைந்துள்ளது.