பிரிந்தா குலசிங்கம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
190 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5881-18-5.
ஒரு துறைமுக நகருக்கான சிறப்பியல்புகளுடன் இலங்கையின் மிக முக்கிய துறைமுகமாக வரலாற்றில் பார்க்கப்படத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும் ஊர்காவற்றுறை, காலனித்துவ காலப் பகுதியிலேயே ஒரு பிரதான நகரமாக்கப்பட்டது. கீழைத்தேய நாடுகளின் வளங்களைச் சுரண்டவும் வர்த்தக வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளவும் தமது மத, மொழி, கலை மற்றும் பல கூறுகளைத் தமக்கான அடையாளங்களாக முன்வைத்தனர். வட இலங்கையைக் கைப்பற்றலும், அதனைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருத்தலும் இத்தகைய தேவைப்பாடுகளின் அடிப்டையிலேயே நிகழ்ந்தது. யாழ்ப்பாண இராஜதானியும் அதன் வளப் பெறுபேறுகளும் சைவசமய உறுதிப்பாடும் காலனியவாதிகளை உறுத்தவே செய்திருந்தது. அவ்வாறு யாழ்ப்பாணத்தினைக் காவல் செய்யும் துறைமுக நகரமாக இருந்ததே ஊர்காவற்றுறை. யாழ்ப்பாணம் என்னும் ஊரையும் அதன் இராஜதானியையும் காவல் செய்யும் தந்திரோபாயமான அமைவிடத்தில் இத் தீவு அமைந்திருக்கின்றமை யாழ் குடாநாட்டினதும் இலங்கையினதும் வரலாற்றில் பல திருப்பங்களைக் கொண்டுவரக்கூடிய சாத்தியத்தையும் காட்டுகின்றது. இவ்வாய்வில் காலனித்துவக் காலத்தில் ஊர்காவற்றுறை நகரத்தின் கட்டிடக்கலை வளர்ச்சி எப்படி இருந்ததென்பதை இந்நூலாசிரியர் காலனிய நிர்வாக அமைப்புக் கட்டடங்கள் உற்பத்தி செய்யப்பட்ட முறை, கிறிஸ்தவ மத வருகை கட்டட வெளியை மாற்றியமைத்தல், காலனியாட்சியால் ஏற்படுத்தப்பட்ட சமூக மாற்றங்கள் கட்டட வெளியினை மாற்றுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விளக்கியிருக்கிறார். பிரிந்தா குலசிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் கலை வரலாற்றுப் பாடத்தில் 2018இல் இளங்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றவர். அதே பல்கலைக் கழகத்தின் நுண்கலைத் துறையில் கலை வரலாற்றியல் பிரிவில் தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் வருகைதரு விரிவுரையாளராகவும் 2019இலிருந்து பணியாற்றி வருகிறார்.