சுகன்யா அரவிந்தன், யாழ்ப்பாணம்: சுகன்யா அரவிந்தன், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).
vii, 154 பக்கம், விலை: ரூபா 495., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-96308-0-2.
உலகின் அனைத்து சமூகங்களும் பல சமூகக் கூறுகளால் ஆக்கம் பெற்றவை. இந்த சமூகக் கூறுகள் பண்பாட்டுக்குப் பண்பாடு அவர்களது மரபுகளுக்கேற்ப மாற்றங்களைப் பெற்றிருப்பினும், அடிப்படையிலே சில தவிர்க்க முடியாதவாறு ஒவ்வொரு பண்பாட்டிலும் பொதுவானவையாக வரையறை செய்யப்படுகின்றன. சமயம், மொழி, நம்பிக்கை, பழக்கவழக்கம், சடங்குகள் என இந்த சமூகப் பண்பாட்டுக் கூறுகள் தொடரும். இவ்வாறுதான் இசையும் தவிர்க்கமுடியாத ஒரு பண்பாட்டுக் கூறாகவே ஒவ்வொரு பண்பாட்டிலும் கலந்திருக்கின்றது. இந்த இசை, தான் வழக்கிலிருக்கின்ற பண்பாட்டு ஏற்புடைமைக்கேற்ப சமூகத்திற்கு சமூகம் வடிவங்களிலும் அளிக்கை முறைகளிலும் மாற்றங்களைப் பெறுகின்றது. இந்த வகையில் சமூகவியல் தளத்திலே நின்று எழுதப்பட்ட 11 ஆய்வுக் கட்டுரைகள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவை இசை எனும் பண்பாட்டுக் கூறு, இசையும் ஆளுமையும், சமகால உலகில் இசையின் சமூக இருப்பு, இசையினூடான பண்பாட்டு அடையாளம்: ஒரு பண்பாட்டு இசையியலாய்வு, இலங்கைத் தமிழ்ப் பண்பாட்டில் வில்லிசை-ஓர் சமூக இசையியல் பார்வை, ஆற்றுப்படை நூல்களில் இசைக் கருவிகள், திருமுறைகள் சுட்டும் இசைக் குறிப்புகள், சமூக மாற்றத்துக்கான இசை (மாயூரம் வேதநாயகம்பிள்ளை அவர்களது சர்வ சமய சமரசக் கீர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் இசையியலாய்வு, ஆலயங்களில் ஓதுவார் மரபு, தமிழ்ச் சமூக இயங்குநிலையில் பாணர்கள், கலையிலிருந்து தொழில் வடிவமாக இசைக் கலை ஆகிய பதினொரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு சர்வதேச மாநாடுகளுக்காக வழங்கப்பட்ட ஆய்வுச் சுருக்கங்களை விரிவாக்கி இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.