எம்.ரி. செல்வராஜா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2014. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
xxii, 186 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 18×12 சமீ., ISBN: 978-81-927041-3-5.
‘கடவுள் வாழ்த்துக்கள்” என்ற முதலாவது பிரிவில் உரும்பிராய் ஓடையம்பதி விநாயகர் பாடல், விம்பிள்டன் விநாயகர் பாடல்கள், ஈலிங் ஸ்ரீகனகதுர்க்கை அம்மன் பாடல்கள், உயர்வாசற் குன்று முருகன் பாடல், ஈஸ்ட்ஹாம் முருகன் பாடல், டூட்டிங் முத்துமாரி அம்மன் பாடல் ஆகிய கோவில்கள் மீது பாடப்பெற்ற பதினாறு பக்திப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து வரும் தமிழும் தவழ்ந்த மண்ணும், தமிழ்த்தாய் பாடல்கள், காதல் பாடல்கள், பலதும் பத்தும், தைப்பொங்கல் வாழ்த்துக்கள் சில, சிறுவர் தாளலய நாடகம் (ஈழத்துச் செல்வங்கள், நல்லதோர் உலகம் செய்வோம், தொண்டர் தம் பெருமை, தீதும் நன்றும் பிறர் தர வாரா, புலம்பெயர் வாழ்வின் அவலம், இம்மண்ணில் எம்மவர்கள்), புதுவருட வாழ்த்துக்கள் சில, வாழ்த்துப் பாடல்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் 89 பாடல்களும் இடம்பெற்றுள்ளன. துரையப்பா செல்வராஜா, உரும்பிராயில் துரையப்பா-சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். 1973இல் லண்டனுக்கு வந்து தனது B.Sc Civil Engineering பட்டப்படிப்பினை முடித்து பொறியியலாளராகப் பணியாற்றிவந்தவர். லண்டனில் 1978இல் ஆரம்பிக்கப்பட்ட மேற்கு லண்டன் தமிழ்ப் பாடசாலையின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றும் இவர் கவிஞராகவும், நாடக ஆசிரியராகவும் சமூகத்தொண்டராகவும் அறியப்பட்டவர். பன்னூலாசிரியரான இவர் இலண்டனில் நாரதர் என்ற நாடகத்தொகுதி, நினைவில் ஒரு நிலா, வாடகை வீடு, உண்மை தெரியாமல் வைத்த நட்பு ஆகிய சிறுகதைத் தொகுதிகள், தமிழறிவு என்ற தலைப்பில் எட்டு தமிழ்ப் பாட நூல்கள், கருணைத்தெய்வமே என்ற பக்திப்பாடல்களின் இறுவெட்டு, ரஸ்புட்டீன் என்ற சரித்திர மொழிபெயர்ப்பு நாவல் ஆகியவற்றினை வழங்கியுள்ளார்.