உடுவிலூர் கலா (இயற்பெயர்: ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன்). யாழ்ப்பாணம்: திருமதி ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன், 2வது லவ் லேன், உடுவில், மானிப்பாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி).
x, 80 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20×14 சமீ., ISBN: 978-624-97879-7-1.
பெண்ணிய எழுத்தாளரும், ஆய்வாளருமான உடுவிலூர் கலாவின் தன்முனைக் கவிதைகள் இவை. இது இவரது ஆறாவத நூலாக வெளிவந்துள்ளது. வேலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தில் பிறந்த கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் புதிய கவிதை வடிவக் கண்டுபிடிப்பான “தன்முனைக் கவிதைகள்” தெலுங்கு நானிலு வடிவத்தை தழுவியது. உடுவிலூர் கலாவும் இவ்வடிவத்தைப் பரீட்சார்த்தமாக பின்பற்றியுள்ளார். தெலுங்கு வடிவ “நானிலு” என்னும் ஆறடிக் கவிதை வகையைத் தழுவிய தமிழ் வடிவமாக இத் தன்முனைக் கவிதைகள் அமைந்துள்ளன. இவ்வடிவமானது தன் முனையில் நின்று மற்றையோரைச் சிந்திக்க வைக்கும் ஒன்றாகும். நான்கு அடிக்குக் குறையாமலும் சராசரியாக எட்டு சொற்களையும், ஆகக்கூடியது பன்னிரண்டு சொற்களையும் கொண்டு கட்டப்படும் சொல்லடுக்கை இக்கவிதைகள் பொதுவாகக் கொண்டிருக்கும். சமூகத்தில் தான் காணும் காட்சிகளை, அவலங்களை பல்வேறு கோணங்களில் தன்முனையில் நின்று தரிசித்து, உள்வாங்கி இந்நூலில் கவிவரிகளாக்கியுள்ளார். “யாழிசை கவித் தடாகம்” என்ற இணையவழிக் கவிஞர் குழுமத்தின் அமைப்பாளரான ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன் வலி தெற்கு பிரதேச எழுத்தாளர் சங்கத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.