16572 மூதன்னையின் பாடல்.

சி.கிருஷ்ணபிரியன். கொழும்பு 6: தேசிய கலை இலக்கியப் பேரவை, 121, ஹம்டன் லேன், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (கொழும்பு: வேர்ள்ட் விஷன் கிராப்பிக்ஸ்).

12+82 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-9871-30-4.

மலையக உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தளத்திலிருந்து தேச விடுதலை, மானுட விடுதலை என விரியும் கவிஞர் சி.கிருஷ்ணபிரியனின் ”மூதன்னையின் பாடல்” என்னும் இந்நூல் தேசிய கலை இலக்கியப் பேரவையின் 120 ஆவது நூலாக வெளிவந்துள்ளது. கவிஞர் சி. கிருஷ்ணபிரியன் மலையகத்தில் ஒரு இடதுசாரி குடும்பத்திலிருந்து உதித்தவர். கவிஞருடைய தந்தை தோழர் சிவசூரிய நாராயணசாமி இயற்கை எய்திய ஓராண்டு நினைவாக வெளிவந்த கவிஞரின் ”வேரின் பிரசவங்கள்” என்ற முதலாவது கவிதைத் தொகுதி உழைக்கும் வர்க்கத்தின் உணர்வுகளுக்கு மதிப்பூட்டுவதாக அமைந்திருந்தது. அவ்வாறே ”மூதன்னையின் பாடல்” கவிதைகளும் அதே உழைக்கும் வர்க்கத்தின் வலி மிகுந்த முன்னேற்றப் பாதைக்கு வழி காட்டுவனவாய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடின உழைப்பை மட்டுமே தம் வாழ்வில் கண்டறிந்திருக்கும் மலையகத்தின் தொழிலாளர் வர்க்கம் எதிர் நோக்குகின்ற சவால்களையும் சஞ்சலங்களையும் இவரது கவிதைகள் உரக்கச் சொல்கின்றன. கவிதைகள் அனைத்தும் சம கால அரசியல், சமூக, பொருளாதார, பெருந்தொற்று நிகழ்வுகளின் சாராம்சமாக அவற்றின் தாக்கங்களை ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக, அடக்கு முறைக்கெதிராகப் பேசிச் செல்கின்றன. இருந்த போதிலும் பல கவிதைகள் மனித நேயம் சார்ந்தவையாய் அன்பு, பாசம், காதல், குழந்தைகள் உலகு, போரின் விளைவுகள், போரின் அவலங்கள், அமைதியின் தேவை, ஏகாதிபத்தியங்களின் தான் தோன்றித்தனங்கள் எனப் பலதையும் தொட்டுச் செல்வனவாயும் அமைந்திருக்கின்றன. ”இக் கவிதைகளில் பெருமளவும் அரசியல் பேசுவன தான். அவை சமகால அரசியல் சமூக பொருளாதார பெருந்தொற்று நிகழ்வுகளின் மீதான எதிர்வினையாக அமைந்துள்ளன. மெல்லுணர்வு சார்ந்த கவிதைகளும் உள்ளன. அவை மனிதனின் அகவெழுச்சி, பிரிவு, நினைவு, வெறுப்பு, காதல், அன்பு போன்ற மெல்லுணர்வு சார்ந்தவை. பெருமளவும் அரசியலைப் பேசுகிற ஒடுக்கப்பட்டவர் பக்கம் நின்று ஒடுக்குமுறைக்கெதிராக பேசுகிற மனம் தான் வாய்க்கப் பெற்றிருக்கிறேன். அரசியல் கவிதைகளில் என்னுடைய அரசியல் சார்பும் வர்க்க நிலைப்பாடும் வெளிப்படுமாறு தான் எழுதியுள்ளேன். நடுநிலைமை எனும் வேடத்தை தரிப்பதில்லை.” (சி.கிருஷ்ணபிரியன், பின்னட்டைக் குறிப்பு).

ஏனைய பதிவுகள்