என்.கே.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: இலக்கியா வெளியீட்டகம், கைதடி, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், 817, ஆஸ்பத்திரி வீதி).
xxii, 82 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-41686-0-2.
ஈழநாடு பத்திரிகையினூடாக வளர்ந்த பத்திரிகையாளர் என்.கே.துரைசிங்கம், பின்னாளில் நல்லதொரு கதைசொல்லியாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். மிகவும் நெருக்கடி மிக்க யாழ்ப்பாணத்துப் போர்ச் சூழலில் சமூகப் பொறுப்பு மிக்க ஊடகவியலாளனாகப் பணியாற்றியவர். இது வெறும் தொழில்சார் கடமைப் பொறுப்பாக மாத்திரம் கருதிவிட இயலாது. “உயிரி” என்ற இச்சிறுகதைத் தொகுதி துரைசிங்கம் அவர்களுள் உறைந்து உயிர்த்து நிற்கும் மண்வாசனை மிக்க படைப்பாற்றலின் வெளிப்பாடு. இத்தொகுப்பினூடாக அவரது சமூகம் சார்ந்த பார்வையையும் கருத்தியல் வெளிப்பாட்டையும் இலக்கிய நயத்துடன் வாசித்தறிய முடிகின்றது. இத்தொகுப்பில் வெளிச்சத்தை நோக்கி, பொங்கல், குறட்டை, கண்கள், ஆச்சி, உயிரி, ஒன்றுகூடல், கூவாத குயில், நம்பிக்கைக் கரங்கள், மணம் மாறாத பூக்கள், எங்கிருந்தாலும் வாழ்வோம், ஆஸ்பத்திரியும் அந்த ஏழு நாட்களும், துடக்கு, தந்தையின் தாலாட்டு ஆகிய 14 கதைகள் இடம்பெற்றுள்ளன.