கே.ஆர்.டேவிட். கொழும்பு 13: கு.வி.அச்சக வெளியீடு, 58, கிறீன் லேன், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (கொழும்பு 13: கு.வி.அச்சகம், 58, கிறீன் லேன்).
x, 138 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ.,
தாய்மையின் விலை, ஆசைச் சாப்பாடு, கண்ணீர் எப்ப முடியும், சுடுகாடு, சூடுகள், மண்வாசனை, பாடுகள், சீறுவாணம், இருள், ஒல்லித் தேங்காய், குறுணிக்கல், விபச்சாரங்கள் ஆகிய 12 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இச்சிறுகதைகளில் வறுமை, அரசியல், கல்வி, இடப்பெயர்வு, சிறுவர் வீட்டுப்பணி என்பவற்றால் ஏற்படும் வதைகள் உணர்வுபூர்வமாகச் சொல்லப்படுகின்றன. சில கதைகள் கிறிஸ்தவப் பின்புலத்தில் படைக்கப்பட்டுள்ளன. தலைப்புச் சிறுகதையான பாடுகள், யேசு கிறிஸ்துநாதர் அனுபவித்த அவல வாழ்க்கையை இலங்கையில் 1983 கறுப்பு ஜீலையில் தமிழர் எதிர்கொண்ட பாடுகளோடு ஒப்புநோக்கிப் பார்க்கின்றது. நவம்பர் 2ம் திகதி கிறிஸ்தவர்களின் மரித்தோர் நினைவுகூரலுக்கு ஒதுக்கப்பட்டது. அன்றைய தினம் மரித்தோர் நினைவாக அவர்கள் விரும்பிய உணவுவகைகளை ஏழைகளுக்கு தானமாக வழங்கும் வழமையுண்டு. இதனை ஆசைச் சாப்பாடு என்ற சிறுகதை பதிவுசெய்கின்றது. திருக்கோணமலையின் நிலாவெளியைக் களமாகக் கொண்டு அந்தோணி என்ற பாத்திரத்தின் வாயிலாக கதை சொல்லப்படுகின்றது. கண்ணீர் எப்ப முடியும், இருள் ஆகிய கதைகள் இளமையில் வறுமையை உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்கின்றன.