பொ.கருணாகரமூர்த்தி. நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600086: Compu Print Premier Design House).
182 பக்கம், விலை: இந்திய ரூபா 225.00, அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-93-89820-30-0.
பொ.கருணாகரமூர்த்தி, புத்தூரில் பிறந்தவர். 1980இல் பெர்லினுக்குப் புலம்பெயர்ந்து அங்கேயே தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருபவர். வாடகை வண்டிச் சாரதீயத்தின் மூலம் தான் பெற்ற அனுபவங்கள், முது பிரஜைகள் நலன் பேண் அலுவலராகப் பணியாற்றியதில் பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றைத் தன் படைப்புகளில் பதிவுசெய்து வருகின்றார். 1985இல் கணையாழியில் வெளிவந்த “ஒரு அகதி உருவாகும் நேரம்” குறுநாவல் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர். காருண்யன், கொன்ஃபூசியஸ், புதுவை நிலவன், அழகு முருகேசு முதலிய பெயர்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பாக இவரது “பதுங்குகுழி” தேர்வுபெற்றது. வனம் திரும்புதல், இவரது சிறுகதைப் படைப்புகளான நிலங்கீழ் வீடு, Donner Wetter, Galle Face Hotel இராணுவத்தில் சித்தார்த்தன், ஓடுகாலித் தாத்தா, காலச்சிமிழ், தாயுமானவள், மனைமோகம், மாயத் தூண்டில், மேகா அழகிய மனைவி, வடிவான கண்ணுள்ள பெண், வனம் திரும்புதல், ஜிமிக்கி ஸ்பெஷலிஸ்ட், ஸோபிதாவுக்கு பெர்லின் காட்டுதல் ஆகிய படைப்பாக்கங்களை உள்ளடக்குகின்றது. புலம்பெயர் தேசங்களில் அலையும் மனிதர்களையும் பொருளாதார, சமூக பாதுகாப்பைக் கோரிநிற்கும் கதாபாத்திரங்களையும் ஆசிரியர் தன் கதைகளில் பாத்திரங்களாக்கியிருக்கிறார். அவை பொது மனதிற்கு அச்சத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கும் பாத்திரங்களாக உருமாறுகின்றன. குடிவரவாளர்கள், கேட்பாரற்று அநாதரவானவர்கள், மரண நிழலில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருப்போர், மனப்பிறழ்வடைந்தவர்கள், விதியே என அலைக்கழிபவர்கள் என பன்முகப்பட்டோரிடம் ஆசிரியர் காட்டும் அக்கறையும் கரிசனையும் கொண்ட இத்தொகுப்பிலுள்ள 14 கதைகளும் ஒற்றுமையும் முரண்களும் நிறைந்தவை. மனிதர்களிடம், அரசியலிடம், சில நேரங்களில் மரணத்திடம் கூட அங்கதம் இழைந்த தொனியில் இணக்கத்தை வேண்டுகின்ற கதைகள் இவை.