மகாலிங்கம் பத்மநாபன். பரந்தன்: சுப்ரம் பிரசுராலயம், இல. 77 , குமரபுரம், 1வது பதிப்பு, ஆவணி 2022. (யாழ்ப்பாணம்: tg Printers திருநெல்வேலி).
xviii, 440 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 900., அளவு: 22×14 சமீ., ISBN: 978-624-99402-0-8.
தாயகத்தில் வன்னி பெருநிலப்பரப்பு, விவசாயத்திலும் அரசியலிலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. காடாக இருந்த அந்தப் பிரதேசத்தை வளம்கொழிக்கும் மண்ணாக மாற்றியவர்களின் கதையே அது ஒரு அழகிய நிலாக்காலம். அவர்கள் காலத்தில் மின்சாரம் இல்லை. சீரான வீதிகள் இல்லை. மருத்துவமனைகள் இல்லை. பாடசாலைகளே இல்லை. இவ்வாறு இல்லை எனத் தொடர்ந்தவற்றை இல்லாமல் ஆக்கிய பெருந்தகைகள் பற்றிய கதைதான் இந்தப்புதினம். மூன்று தலைமுறைகளின் வாழ்வுக்கோலங்களை இந்தப் புதினம் பேசுகிறது. காடு மண்டிக்கிடந்த வன்னி பெருநிலப்பரப்பினை பசுமை பூக்கும் மண்ணாக மாற்றி, உழவுத் தொழிலின் மூலம் மக்களின் பசியை போக்கிய அம்மக்களின் கடும் உழைப்பு இந்நாவலில் விபரிக்கப்படுகின்றது. வன்னியின் மூன்று கிராமங்களின் கதையைப் பேசும் இந்நூல் அங்கு வாழ்ந்த மற்றைய ஜீவராசிகள் பற்றியும் பேசுகிறது. மக்களுக்கும் அவற்றுக்குமிடையே வளரும் உறவும், முரண்பாடும், பகையும் கூட வாழ்க்கைக்கான போராட்டத்தின் அம்சங்கள்தான் என்பதை நூலாசிரியர் சொல்லாமல் சொல்கிறார். 1900 ஆம் ஆண்டில் தொடங்கும் வன்னிமாந்தரின் கதை, 1982 ஆம் ஆண்டு வரையில் நீடிக்கிறது. இடைப்பட்ட காலத்தில் அங்கு நேர்ந்த அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களையும் பண்பாட்டுக் கோலங்களையும் உணவு நாகரீகத்தையும், சிறு தெய்வ வழிபாடு தொடக்கம், ஆலயம் அமைத்து உற்சவம் நடத்தும் காலம் வரையில் மக்களின் மத நம்பிக்கைகள் பற்றியும் பேசுகின்றது. மேலும் அம்மக்களின் அன்றைய காதல், திருமணம், மறுமணம் பற்றியும் தொட்டுச் செல்கின்றது. போர்த்துக்கீஸர், ஒல்லாந்தர், பிரித்தானியரின் வருகை, உள்ளூர் அரசியல்வாதிகளின் பிரவேசம் என்பனவும் கதையோடு நகர்ந்து வரலற்றுப் புதினம் ஒன்றை வாசிக்கும் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே ”வணக்கம் லண்டன்” இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து, பின்னர் லண்டனிலிருந்து வெளிவரும் ”ஒரு பேப்பர்” பத்திரிகையில் தொடர்ந்து பிரசுரமானது. பின்னாளில் ”சுடரொளி வாரமலர்” இப்புதினத்தின் தலைப்பை ”அது ஒரு அழகிய நிலாக்காலம்” என்று மாற்றித் தொடராக வெளியிட்டிருந்தது. மேற்கே கொல்லனாறு, தெற்கே எள்ளுக்காடு, கிழக்கே நீலனாறு, வடக்கே வடக்குக் காடு என்பவற்றிற்கிடையே அமைந்திருந்த காடு, மீசாலையிலிருந்து வந்த தம்பையராலும், அவரது உறவினர்களாலும், தம்பையரின் உறவினர்களும் இணைபிரியாத நண்பர்களாகவுமிருந்த ஆறுமுகம், முத்தர் என்பவர்களாலும் வெட்டப்பட்டு கழனியாக்கப்பட்டு பின்னர் வளம் கொழிக்கும் கிராமம் ஆக மாறிய இடமே பெரிய பரந்தன் ஆகும். தம்பையர், விசாலாட்சி, ஆறுமுகத்தார், கணபதி, மீனாட்சி என கதையின் முக்கிய மாந்தர்களின் அன்றாட வாழ்வுடன், வன்னிமண், எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை அழகியலுடன் சித்திரிக்கிறார் மகாலிங்கம் பத்மநாபன். ஒவ்வொரு அங்கத்தின் தொடக்கத்திலும் உள்நாட்டு மற்றும் உலக நாடுகளின் வரலாற்றுச்செய்திகளையும் பதிவுசெய்துள்ளார். ஓய்வுநிலை அதிபரான பத்மநாபன், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெரிய பரந்தனில் பிறந்தவர். மன்னார் பிரதேசத்தில் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னாளில் கிளிநொச்சி பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரிராகவும் அதிபராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.