சிவ.ஆரூரன்;. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
iv, 212 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5881-28-4.
ஆதுரசாலை (நாவல்).
சிவ.ஆரூரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 2வது பதிப்பு, மார்கழி 2023, 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
iv, 212 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-35-1.
எமது மண்ணில் வைத்தியசாலைகள் வைத்தியர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேளையில் ”நீரேந்துப் பகுதியில் பொழிய வேண்டிய மழை உப்பளத்தில் இரைத்துப் பொழிவது போல” எம் மண்ணின் வைத்திய மைந்தர்கள் பலர் குடிபெயர்ந்து அந்நிய மண்ணில் வைத்தியம் பார்த்துச் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வரும் ஒரு சூழலில், பச்சிலைப்பள்ளியில் முடங்கிக் கிடந்த வைத்தியசாலை ஒன்று புத்தாக்கம் பெற்று இயங்கிய கதை இது. போர்க்காலத்தில் எமது மண்ணின் வைத்தியர்கள் பலர் எந்தவித ஆதாயத்தையும் கருத்தில் கொள்ளாது உயிர் ஒன்றை காப்பாற்றிவிட வேண்டும் என்ற உயரிய நோக்கை மட்டும் கருத்திற்கொண்டு குண்டுவீச்சுக்கு மத்தியிலும் செயற்பட்டு வந்தமையையும் அவர்களது அர்ப்பணிப்பான சேவையையும் கண்ணுற்று வந்த நாம் இன்று எமது பிரதேச வைத்தியசாலைகளில் வைத்தியர் பற்றாக்குறை நிகழ்வதைக் கண்ணுற்று வருந்துகின்றோம். என் இந்த நிலைமை ஏற்பட்டது? எமது வைத்தியர்கள் எங்கே? ஏன் எம்மக்களுக்கு இந்த வெளிநாட்டு மோகம்? எமது வைத்திய சாலைகள் சில ஏன் மூடப்படுகின்றன என்பதற்கு இந்த நாவல் விடை பகர்கின்றது. சிவ.ஆரூரன் ஈழத்து நாவல் உலகிற்கு கிடைத்த அருமையான படைப்பாளி. சிறைக்கம்பிகளுக்குள் அவரது வாழ்க்கை முடக்கப்பட்டுள்ள போதிலும் சோர்ந்துவிடாது, தொடர்ச்சியாக சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எழுதி வருகின்றார். எமது மண்ணின் மீதும் மக்களின் மீதும் கொண்ட பற்று அவரது படைப்பாக்கங்களில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூலின் முதற் பதிப்பு 210 ஆவது ஜீவநதி வெளியீடாகவும் 2ஆவது பதிப்பு, 311ஆவது ஜீவநதி வெளியீடாகவும் வெளிவந்துள்ளது. சிறந்த நாவலுக்கான (2021) சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்ற நூல்.