சியாமளா யோகேஸ்வரன். யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
xix, 217 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-97823-2-7.
பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான சியாமளா தற்போது அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார். மெல்பேர்னில் வெளிவரும் இளவேனில், நந்தவனம் ஆகிய சிற்றிதழ்களில் தன் படைப்பிலக்கியங்களை பகிர்ந்துகொண்ட இவரது முதலாவது நாவலாக இது அமைகின்றது. இந்நாவல் கணவனை இழந்த, உத்தியோகம் பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டு நகர்த்தப்படுகின்றது. அவளையும் அவளது நான்கு வளர்ந்த பிள்ளைகளையும் சுற்றியே பிரதானமாக கதை நகர்த்தப்படுகின்றது. பின்னர் அவர்களது வீட்டுச் சூழலிலிருந்து தாவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை பின்னைய கதைக்களமாகத் தேர்ந்துகொள்கின்றது. அங்குள்ள சில மருத்துவர்களையும், தாதிகளையும், சில நோயாளிகளையும் அவர்களது உறவுகளையும் இக்கதைக்களத்தில் நடமாட வைக்கின்றார். இந்நாவலில் மருத்துவமனைச் சுற்றாடலுடன் இணைத்து இன்றைய பெருந்தொற்றுப் பிரச்சினையான கொரோனாவும் கணிசமான அளவில் கதையுடன் கலந்து பேசப்படுகின்றது. நோயாளியான அம்புஜம் பாட்டியின் கதாபாத்திர வார்ப்பு நாவலின் சிறப்புகளில் ஒன்றாகின்றது. குடும்பச் சிக்கல், காதல், கொரோனா என மாறிமாறி வரும் பிரச்சினைகளும் தீர்வுகளும் நாவலை சுவை குன்றாது நகர்த்திச் செல்கின்றன.