வள்ளியம்மை சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: அழ.பகீரதன், சத்தியமனை வெளியீடு, சுழிபுரம், 1வது பதிப்பு, ஜனவரி 2022. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).
xii, 108 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ.
தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களது துணைவியார் வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் தங்கள் திருமண நிகழ்வின் 60ஆவது ஆண்டு நிறைவின் நினைவாக ஜனவரி 19இல் வெளியிட்டுள்ள நூல். எண்பது அகவை கடந்து வாழ்ந்துவரும் வள்ளியம்மை சுப்பிரமணியம் தனது வாழ்வின் அனுபவங்களிலிருந்தும் தேறி 21ஆம் நூற்றாண்டின் இளைய தலைமுறையினர் எப்படி பண்பட்டு வாழவேண்டும் என்ற தனது எதிர்பார்ப்புகளை எழுத்துகளாக வடித்து இக்குறுநாவலை தந்திருக்கிறார். வட்டுக்கோட்டைத் தொகுதியில் உள்ள சுழிபுரம் கிராமத்தில் வாழ்ந்த ஒரு விவசாயத் தொழிலாளியின் குடும்பத்தின் கதை இது. விவசாயியின் பிள்ளைகள் வளர்ந்து, தாம் பெற்ற கல்வியினால் செல்வத்தையும் பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாது, “நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற பரந்த நோக்கில் வாழ்கின்றர்கள். பெற்றோரை இழந்த தனது பேரப்பிள்ளைகளைச் சிறந்த முறையில் வளர்த்து ஆளாக்கும் அம்மாச்சி தங்கமுத்துதான் இக்கதையின் ஆணிவேராகத் திகழ்கிறார். அந்த வேரைப் பற்றிப் படர்ந்து கிளை பரப்பி, வீட்டுக்கும் நாட்டுக்கும் நிழல் கொடுக்கும் பிள்ளைகளின் வாழ்வியலைப் பேசுவதாகவே இக்கதை அமைந்துள்ளது.