நிவேதா ஜெகநாதன். கொழும்பு 13: நிவேதா ஜெகநாதன், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 13: கே.எஸ்.கே.பிரின்டர்ஸ், 179, பிக்கரிங்ஸ் வீதி, கொட்டாஞ்சேனை).
ix, 283 பக்கம், விலை: ரூபா 490., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-624-95090-0-9.
மலையக இளம் படைப்பாளர்களுள் ஒருவரான நிவேதா ஜெகநாதன், பதுளை அப்புத்தளை பிட்ரத்மலையில் பிறந்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பட்டதாரியாவார். அத்துடன் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பாடப் பிரிவில் பட்டயக் கல்வி கற்றவருமாவார். U.T.V தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராகப் பணியாற்றுகின்றார். இச்சமூக நாவலில், தான் பிறந்து வளர்ந்த மலையகத்தை அடித்தளமாகக்கொண்டு கதையைக் கட்டியெழுப்பியுள்ளார். தேயிலை மலையில் பிறந்து, வாழ்ந்து, மடிந்து, இறுதியில் அந்தத் தேயிலைகளுக்கே உரமாகிப் போகும் மலையக மக்களின் வாழ்க்கை, பண்பாடு, பாரம்பரியம், பொருளாதாரம், காதல் என்பன கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கின்றன. மதுவுக்கும் கசிப்புக்கும் அடிமைப்பட்டு குடும்பப் பொறுப்பை ஒரு குடும்பத் தலைவன் உதாசீனம் செய்யும்போது, தலைவியின் தலையில் அந்தப் பொறுப்பும் கடன் சுமையும் சுமத்தப்படுகின்றது. அது அக்குடும்பத்தில் எத்தகைய பாதிப்புகளை கொண்டுவருகின்றது என்பதையும் கதையில் காணமுடிகின்றது.