ஷோபாசக்தி. சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, மே 2022. (சென்னை 600 005: ஸ்ரீதுர்க்கா பிரின்டர்ஸ்).
304 பக்கம், விலை: இந்திய ரூபா 350., அளவு: 22.5×15 சமீ., ISBN: 979-10-69995-71-0.
ஸலாம் அலைக்.
ஷோபாசக்தி. சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 2வது பதிப்பு, டிசம்பர் 2022, 1வது பதிப்பு, மே 2022. (சென்னை 600 005: ஸ்ரீதுர்க்கா பிரின்டர்ஸ்).
162+142 பக்கம், விலை: இந்திய ரூபா 450., அளவு: 22.5×15 சமீ., ISBN: 979-10-69995-71-0.
”அஸ்ஸலாமு அலைக்கும்“ -உங்கள் மீது சாந்தி உண்டாவதாக என்று ஒருவர் கூறினால் அதற்கு ‘வஅலைக்கும் அஸ்ஸலாம்“ -உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக என்று பதில் வழங்குவது இஸ்லாமிய கலாச்சாரம். ஷோபாசக்தியின் நாவல் ஸலாம் அலைக் பேசும் செய்திகளில் அடிநாதமாக ஒலித்துக்கொண்டிருப்பதும் இதுவே. ஆதி மனிதன் வேட்டையாடி சாப்பிட்டு உயிர் வாழ்வதற்காக ஆயுதங்களை கண்டுபிடித்தான். ஆனால், நவீன மனிதன் சகமனிதனின் உயிரைக் குடிப்பதற்காகவும் அயல் நாடுகளை ஆக்கிரமித்து அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்காகவும் ஆயுதங்களை கண்டுபிடித்தவண்ணமும் உற்பத்திசெய்தவாறும் வாழ்கின்றான். இந்த ஆயுதங்கள் உற்பத்தி செய்தது அகதிகளைத்தான். அவ்வாறு உலகெங்கும் அலைந்துலழும் அகதிகளின் கதைதான் ஷோபா சக்தியின் “ஸலாம் அலைக்”. தன்னடையாளம் அழித்து நிற்கும் அருவுருவங்கள் பற்றி நூலின் இருமுனைகளிலிருந்தும் தொடங்கிச் சொல்லப்படும் கதை வளையம் இது. இதன் மேலட்டையின் ஒருபக்கம் நீலம் பின்னட்டை சிவப்பு. நீலப்பக்கத்தில் தொடங்கும் பகுதி 142 ஆவது பக்கத்தில் முடிகிறது. சிவப்பு பக்கத்தில் தொடங்கும் பகுதி 162 ஆவது பக்கத்தில் முடிகிறது. புத்தகத்தை இருபுறத்திலிருந்தும் படிக்கவேண்டும். ஆனால், இரு முனைகளிலிருந்தும் தொடங்கும் நாவல் ஒரு புள்ளியில் இணைகிறது. எந்தப்பக்கத்திலிருந்து வாசித்தாலும், முழுமை பெற்ற நாவலின் வடிவமாகவே அமைகின்றது. இலங்கை வடபுலத்தில் மண்டை தீவில் நயினாதீவைச்சேர்ந்த ஒரு சாத்திரியாருக்கும் வெளியுலகம் அறியாத ஒரு அப்பாவிப் பெண்ணுக்கும் அக்கா, தங்கை என இரண்டு சகோதரிகளுக்கும் நடுவே பிறந்த ஜெபானந்தனின் கதையே ஸலாம் அலைக். ஆனால், இங்கே ஜெபானந்தனைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், அவன் ஊரிலும், இடம்பெயர்ந்து உயிரைப்பாதுகாக்க ஓடி ஒளித்துத் திரியும் கிராமங்களிலும் பற்றைக்காடுகளிலும் இயக்கத்தின் தடுப்பு முகாமிலும், அங்கிருந்து தப்பிவந்து கொழும்பு ஜிந்துப்பிட்டியிலிருந்து தலை மாற்றப்பட்ட கடவுச்சீட்டு மூலம் தாய்லாந்துக்கு தப்பிச்சென்று, அங்கிருந்து பிரான்ஸுக்கு ஓடிய பதின்ம வயது இளைஞனின் அலைந்துழல் வாழ்வே இந்நாவலின் கதை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70073).