வயிரமுத்து திவ்வியராஜன். யாழ்ப்பாணம்: கலாலயம் பதிப்பகம், இல.68, நீதிமன்ற வீதி, மல்லாகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).
xx, 146 பக்கம், சித்திரம், புகைப்படம், விலை: ரூபா 525., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-624-5760-01-5.
சத்திர சிகிச்சை செய்த நிலையிலும் பத்துத் தடவைகளுக்கு மேல் கடுமையாகப் பாதிப்புற்ற நிலையிலும் வலுவுடன் இயங்குவேன் என்ற உருக்கு உறுதி மிக்க ஒரு இதயம் பற்றிய கதையைப் பேசுகிற நூல் இது. இந்த உந்துதலுடன் ஓய்வொழிச்சல் இல்லாமல் இயங்குகின்ற திரு. திவ்வியராஜனின் திட மனதுதான் இந்த அறிவியல் வளர்ச்சியை வாழ்வியல் பயன்பாட்டுக்கு உரித்தாக வென்றெடுத்துச் சாதித்துக் காட்டியது. கொழும்பு பல்கலைக்கழக மாணவராக அவர் இருந்த 1970ஆம் ஆண்டுக் காலத்தில் இலங்கையில் சமத்துவச் சமூக மாற்றத்தைக் காண உழைக்கும் தீவிர செயற்பாட்டாளராக இயங்கியவர். அரசியல் சூறாவளியில் தேசிய இன விடுதலைப் போராட்டம் மேலெழுந்தபோது, காணாமலாக்கப்பட்ட தனது தம்பியைத் தேடிக் கண்டறியத் துடித்த அண்ணனாக எண்பதுகளில் அவரை காணமுடிகின்றது. புலம்பெயர்ந்த பின்னர் சென்னைக்கு வந்து குடும்பமாக ஒலிப்பேழை இயக்கத்தைத் தொடர்ந்தவர். தமிழகத்தில்- தன் புதிய வாழிடத்திலும் பாடகராக, பாடலாசிரியராக, கவிஞராக, திரைப்படச் செயற்பாட்டாளராக, படைப்பாளியாக தொலைக்காட்சி ஊடகவியலாளராக என்று பன்முகச் செயற்பாட்டில் ஈடுபட்ட இவரது அனுபவங்களின் பதிவு இது. உயிர் ஓசை, காதல் செய்வீர், தாக்குதல்-1, யார் தந்தது?, உருவும் அசைவும், யாகாவாராயினும், வாழ்நிலம், நல்லாசிரியனாய், தாக்குதல்-2, அச்சம் இல்லை, அமுங்குதல் இல்லை, கோடை கொடும்பனி, துள்ளி எழுந்து, எறித்மியா (Arrhythmia), எண்ணித் துணி, ஐ.சி.டி. (I.C.D) என் தோழன், தோழனே உன் தோளோடு, தோற்றங்கள் பல, தாக்குதல்-3, இசையால் வசமாகி, எரியட்டும் தீ, இறவாமை, சமுத்திரத்தில் கரைதல், உயிர் உலா, நோயோடு போராடு, வாழ்தல் இனிது, முகநூல் கருத்துக்கள், திவ்வியராஜனின் கலைத் தடங்கள் ஆகிய 28 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.