கம்பளைதாசன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: இலங்கை இஸ்லாமிய பேரவை, 1வது பதிப்பு, 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை).
48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×18.5 சமீ.
காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இஸ்மாயில் சாகிபு (05.06.1896-05.04.1972) இந்தியாவின் பெரும் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவராவார். காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள். தமிழகத்தின் திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் பிறந்தவர். தனது பி. ஏ. பொதுத் தேர்வை எழுதாமல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவர் ஈடுபடத் தொடங்கினார்;. இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-இல் நவாப் சலீம் முல்லாகான் அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற கட்சியை ஆரம்பித்தார். அவருக்குப் பின்னர் முகமது அலி ஜின்னா, அதனை நடத்தி வந்தார். ஜின்னாவுக்கும் இந்தியப் பிரிவினைக்கும் முஸ்லிம் லீக்கின் பெரும் தலைவர்களுள் ஒன்றாக இருந்து இவர், ஆற்றிய உதவி அளப்பரிது. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரானார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார். 1945 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார். 1967இல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார். காயிதே மில்லத்தில் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ”காயிதே மில்லத் நாகைப்பட்டினம் மாவட்டம்” என்று பெயர் சூட்டியது. 2003ஆம் ஆண்டு அவர் நினைவாக தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தைக் கட்டியுள்ளது. காயிதே மில்லத் நினைவாக சென்னையில் காயிதே மில்லத் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பெருந்தலைவரின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு இலங்கையில் இந்த சிறப்பு மலர் பல்வேறு வர்த்தக விளம்பரங்களுக்கிடையே காயிதே மில்லத் தொடர்பான செய்திகள், சிறு கட்டுரைகள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றுடன் வெளியிடப்பட்டுள்ளது.